ஒகேனக்கல் சுற்றுலா தலம் திறப்பு பரிசல் சவாரி செய்து பயணிகள் உற்சாகம்

ஒகேனக்கல் சுற்றுலா தலம் 6 மாதத்திற்கு பிறகு நேற்று திறக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் பரிசலில் உற்சாகமாக சவாரி செய்தனர்.

Update: 2021-09-27 17:38 GMT
பென்னாகரம்:
ஒகேனக்கல் சுற்றுலா தலம் 6 மாதத்திற்கு பிறகு நேற்று திறக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் பரிசலில் உற்சாகமாக சவாரி செய்தனர்.
சுற்றுலா தலம்
தமிழகத்தில் புகழ் பெற்ற சுற்றுலா தலமான தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். கொரோனா தொற்று பரவலை தடுக்க கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஒகேனக்கல் சுற்றுலா தலம் மூடப்பட்டது. இதையடுத்து அருவிக்கு செல்லும் நுழைவுவாயில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
இதனிடையே பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நேற்று ஒகேனக்கல் சுற்றுலா தலம் திறக்கப்பட்டது. இதை பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். பின்னர் அவர் மீன் மார்க்கெட், சமையல் கூடங்கள், பரிசல் துறை உள்ளிட்ட இடங்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பரிசல் ஓட்டிகள், மசாஜ், சமையல் தொழிலாளர்களிடம் அவர் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. கூறியதாவது:-
 செயற்கை நீர்வீழ்ச்சி
உலக சுற்றுலா தினத்தில் ஒகேனக்கல் சுற்றுலா தலம், நீண்ட நாட்களுக்கு பிறகு திறந்தது மகிழ்ச்சியாக உள்ளது. சமையல் செய்வதற்கு தனி இடமும், ஈமச்சடங்கு செய்வதற்கு தனி இடமும் ஒதுக்குமாறு சட்டசபையில் எடுத்துக்கூற உள்ளேன். அதேபோல் ஒகேனக்கல்லில் ஆபத்தான இடங்கள் கண்டறியப்பட்டு உயிர் இழப்பு ஏற்படாதவாறு தடுப்பு வேலிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்கும் போது சுற்றுலா பயணிகள் திரும்பி செல்லாதவாறு செயற்கை நீர்வீழ்ச்சி மற்றும் குழந்தைகளை கவரும் வகையில் பூங்காக்கள் அமைக்கப்படும். முதல்-அமைச்சர் மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து சுற்றுலா தலத்தை மேம்படுத்த வழிவகை செய்யப்படும். 
அனுமதி
மாவட்ட நிர்வாகம் அறிவித்த கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி அனைவரும் கடைபிடிக்க வேண்டும். வருகிற 1-ந்தேதி முதல் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்கவும், மசாஜ் தொழிலாளர்கள் செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்