கணவன் கழுத்து நெரித்து கொலை
அவினாசியில் குடும்ப தகராறில் கணவனை கழுத்தை நெரித்து கொன்ற மனைவியை போலீசார் தேடி வருகிறார்கள்.
அவினாசி
அவினாசியில் குடும்ப தகராறில் கணவனை கழுத்தை நெரித்து கொன்ற மனைவியை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த கொலை குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
குடும்ப தகராறு
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த பழங்கரை இந்திரா காலனியை சேர்ந்தவர் ராயன் என்கிற ராயப்பன் வயது 46. கூலி வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி முருகாத்தாள் 45. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
கூலி வேலைக்கு செல்லும் ராயப்பன் தினமும் வீட்டிற்கு வரும் போது மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்ற ராயப்பன் வேலை முடிந்ததும் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
கழுத்தை இறுக்கி கொலை
சிறிது நேரத்திற்கு பிறகு ராயப்பனின் தங்கை அங்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லை. ஆனால் வீட்டினுள் ராயப்பன் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அவருடைய உடல் அருகே துண்டு டவல் ஒன்று கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ராயப்பனின் தங்கை அவினாசி போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு விரைந்து வந்து ராயப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் குடும்ப தகராறில் முருகாத்தாள் தனது கணவர் ராயப்பனின் கழுத்தில் துண்டை போட்டு இறுக்கி கொலை செய்து விட்டு தப்பி ஓடியது தெரியவந்தது. இதையடுத்து முருகாத்தாளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மேலும் இது தொடர்பாக ராயப்பனின் மகனிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடும்ப தகராறில் தொழிலாளியை மனைவியே கழுத்தை இறுக்கி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.