உயர் மின்அழுத்தத்தால் மின்சாதன பொருட்கள் சேதம்: விடூர் கிராம மக்கள் சாலை மறியல்
உயர் மின்அழுத்தத்தால் மின்சாதன பொருட்கள் சேதமடைந்ததால் விடூர் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மயிலம்,
மயிலம் அருகே வீடூர் கிராமத்தில் உயர் மின்அழுத்தம் இருந்து வருகிறது. இதனால், கடந்த ஒரு மாதமாக அந்த பகுதியில் உள்ள வீடுகளில் மின்சாதன பொருட்கள் அடிக்கடி சேதம் அடைந்து வருகிறது. இதுபற்றி மின்வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
நேற்று மதியமும், உயர் மின்அழுத்தம் ஏற்பட்டு, 50-க்கும் மேற்பட்டவர்களின் வீடுகளில் இருந்த மின்சாதன பொருட்கள் பழுதானது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் விழுப்புரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த மின்வாரிய அலுவலர் சண்முகம் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடனடியாக உயர் மின்அழுத்த பிரச்சினையை சரி செய்து தருவதாக உறுதியளித்தார். இதையடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.