பள்ளிகளில் காந்தி ஜெயந்தி விழா

அக்டோபர் 2-ந் தேதி விடுமுறை அளிக்காமல் பள்ளிகளில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாட வேண்டும் என்று சப்-கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

Update: 2021-09-27 16:37 GMT
பொள்ளாச்சி

அக்டோபர் 2-ந் தேதி விடுமுறை அளிக்காமல் பள்ளிகளில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாட வேண்டும் என்று சப்-கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

பாதாள சாக்கடை பணிகள்

பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் தலைமை தாங்கி, மனுக்களை வாங்கினார். அப்போது எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பொள்ளாச்சி நகராட்சியில் பொதுமக்களின் வரிப்பணம் கோடிக்கணக்கில் செலவு செய்து பாதாள சாக்கடை பணிகள் நடைபெறுகிறது. இந்த திட்டத்தில் முக்கிய சாலைகள், குறிப்பாக ராஜாமில் ரோட்டில் அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை மூடிகள் தரமற்றதாகவும், சரியாக பொருத்தப்படாமல் ஆங்காங்கே உடைந்து பள்ளமாகவும் உள்ளது. கனரக வாகனங்கள் செல்லும் போது போக்குவரத்துக்கு மிகவும் சிரமமாக உள்ளது. 

பாதாள சாக்கடை பணிகள் தரம் இல்லாமல் உள்ளது. எனவே சப்-கலெக்டர் நேரில் ஆய்வு செய்ய வேண்டும். மேலும் சீரமைக்காத தார் சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவர்களின் ஓரத்தில் மண் மேடுகளை அப்புறப்படுத்தும் வேலைகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

காந்தி ஜெயந்தி

ஆனைமலை மகாத்மா காந்தி ஆசிரமத்தினர் கையில் பதாகைகளை ஏந்தி வந்து மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- வருகிற 2-ந் தேதி காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக காந்தி பற்றியும், அவரது தன்னலமற்ற சேவை, சத்தியாகிரக போராட்டம் உள்ளிட்ட சிறப்புகள் பற்றியும் மாணவர்கள் அறிய முடியாமல் போகிறது. மேலும் காந்தி குறித்த விழிப்புணர்வு இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே காந்தி ஜெயந்தி அன்று விடுமுறை நாளாக அறிவிக்காமல் காந்தி ஜெயந்தி விழா நாளாக அறிவிக்க வேண்டும்.

அன்றைய தினம் வழக்கமான பாடங்களை தவிர்த்து மகாத்மா காந்தி பற்றியும், அவரது உயர்ந்த ஒப்பற்ற கொள்கைகளை பற்றிய கருத்தரங்கம், சொற்பொழிவு, கலந்துரையாடல், கட்டுரை எழுதுதல், மரக்கன்று நடுதல், ஓவியம் வரைதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்