விழுப்புரம் மாவட்டத்தில் மத்திய அரசை கண்டித்து ரெயில்-சாலை மறியல் 111 பேர் கைது

விழுப்புரம் மாவட்டத்தில் மத்திய அரசை கண்டித்து ரெயில் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் 111 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-09-27 16:36 GMT
விழுப்புரம், 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 இவர்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், இந்த சட்டங்களை திரும்ப பெறுதல், பெட்ரோல் , டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைஉயர்வை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் நாடு முழுவதும் ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்துக்கு விவசாயிகள் சங்கத்தினர் அழைப்பு விடுத்தனர். அதன்படி நேற்று நாடு முமுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பெரும்பாலான கடைகள் திறந்து இருந்தது. மேலும் பஸ் போக்குவரத்தும் வழக்கம் போல் இருந்தது. இதில் விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு குறைந்த எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்பட்டன. 

அதே நேரத்தில் பல்வேறு இடங்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி ரெயில், சாலை மறியல், ஆர்ப்பாட்டம் என்று பல்வேறு போராட்டம் நடைபெற்றது.

ரெயில் மறியல்

அந்த வகையில் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சகாபுதீன் தலைமை தாங்கினார். 

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.வி.சரவணன், மாவட்ட விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் கலியமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். இதில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் மோகன்ராஜ், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் இளங்கோ, கோவிந்தராஜ், லட்சுமி, அல்லிமுத்து, மாசிலாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இவர்கள், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பியபடி விழுப்புரம் ரெயில் நிலையத்திற்குள் சென்று அங்குள்ள 5-வது நடைமேடையில் இருந்து புறப்பட தயாராக இருந்த சென்னை- குருவாயூர் செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனே விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிச்சாமி, இன்ஸ்பெக்டர்கள் ஜெய்சங்கர், ரமேஷ் மற்றும் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்பட 52 பேரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச்சென்று விழுப்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

சாலை மறியல்

இதேபோல், விழுப்புரம் எம்.ஜி. சாலை சந்திப்பில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் மாவட்ட பொதுச்செயலாளர் முகமது ரபி தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட மாவட்ட செயலாளர் அக்பர்அலி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ரஷித் உள்பட 18 பேரை விழுப்புரம் நகர போலீசார் கைது செய்தனர். 

மேலும் கண்டமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் பாலமுருகன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 10 பேரும், திருச்சிற்றம்பலம் கூட்டுசாலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வட்ட செயலாளர் சேகர் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 13 பேரும் கைது செய்யப்பட்டனர். 

ஆர்ப்பாட்டம்

இதேபோல் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே அனைத்து மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச. பேரவை துணைத்தலைவர் ராசவேல் தலைமை தாங்கி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். 

இதில் தொ.மு.ச. மாவட்ட கவுன்சில் பொருளாளர் சேகர், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மூர்த்தி, மாவட்ட தலைவர் முத்துக்குமரன், ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட தலைவர் சவுரிராஜன், ஏ.ஐ.டி.யு.சி. நிர்வாகி அனவரதன், ஏ.ஐ.யூ.டி.யூ.சி. நிர்வாகி சிவக்குமார், எச்.எம்.எஸ். நிர்வாகி ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் தொ.மு.ச. பொதுச்செயலாளர் பிரபா தண்டபாணி நன்றி கூறினார்.

இதேபோல் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமையிலும், அதே இடத்தில் சி.ஐ.டி.யூ. சார்பில் அதன் மாவட்ட பொதுச்செயலாளர் மூர்த்தி தலைமையிலும், அரகண்டநல்லூரில் கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாவட்ட நிர்வாகிகள் விஜயகுமார், வேல்மாறன் ஆகியோர் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டிவனம்

திண்டிவனம் மேம்பாலம் கீழ் பகுதியில் உள்ள தபால் நிலையம் எதிரே இந்திய கம்யூனிஸ்டு கட்சி வட்ட நிர்வாகக்குழு இன்ப ஒளி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். 

இதனிடையே தகவல் அறிந்த திண்டிவனம் போலீசார் விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேரை கைது செய்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் மொத்தம் 59 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்