ஊட்டி
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 2-வது சீசனையொட்டி 100-க்கும் மேற்பட்ட ரகங்களை சேர்ந்த 2 லட்சத்து 40 ஆயிரம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டது. தற்போது மலர் பாத்திகள், பூங்காவின் நுழைவுவாயில், இத்தாலியன் பூங்கா, ஜப்பான் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் மலர்கள் பூத்துக் குலுங்குகிறது.
இது சுற்றுலா பயணிகளை கவர்ந்து உள்ளது. 2-வது சீசனை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்காக மலர் பூந்தொட்டிகளை மலர் மாடத்தில் அடுக்கி வைக்கும் பணி கடந்த 24-ந் தேதி தொடங்கியது.
தொடர்ந்து டேலியா, சால்வியா, சென்டோரியா, மேரிகோல்டு, பிகோனியா, டெய்சி, காலண்டுலா, டயான்தஸ், கிரைசாந்திமம், ஆஸ்டர், பிரிமுலா, பால்சம், டியூப்ரஸ் பிகோனியா, ஜெரேனியம் உள்பட 120 ரகங்களை சேர்ந்த 12 ஆயிரம் மலர் பூந்தொட்டிகள் காட்சிக்கு அடுக்கி வைக்கப்பட்டது.
மேலும் 3 ஆயிரம் மலர் மற்றும் அலங்கார பூந்தொட்டிகளை கொண்டு புல்வெளியில் வட்ட வடிவில் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது. ஐரிசன் அலங்கார செடிகள், 10 ரகங்களை சேர்ந்த மலர் செடிகள் இடம்பெற்று இருக்கிறது.
பணியாளர்கள் மலர் அலங்காரம் மற்றும் மலர் மாடத்தில் பூந்தொட்டிகளை அழகாக அடுக்கி வைத்து உள்ளனர். 2-வது சீசனுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மலர் மாடத்தில் பூத்து குலுங்கும் மலர்கள் மற்றும் மல்ர் அலங்காரத்தை பார்வையிட அனுமதிக்கப்பட்டு உள்ளது.
தற்போது பூங்காவுக்கு வெளிமாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் பல்வேறு வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் மலர்களை கண்டு ரசிப்பதோடு, அதன் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர்.
மலர் அலங்காரம் அருகே நின்று செல்பி எடுத்து மகிழ்கின்றனர். ஒரு மாதம் சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்காக மலர் மாடம் திறந்து விடப்பட்டு உள்ளது. 2 ஆண்டுகளாக கோடை சீசன் நடைபெறாத நிலையில், நடப்பாண்டில் 2-வது சீசனில் மலர் அலங்காரங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருவது குறிப்பிடத்தக்கது.