சத்தியமங்கலத்தில் அடுத்தடுத்து தொடர் திருட்டு 3 வீடுகளின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை

சத்தியமங்கலத்தில் அடுத்தடுத்து 3 வீடுகளின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

Update: 2021-09-26 21:03 GMT
சத்தியமங்கலம்
சத்தியமங்கலத்தில் அடுத்தடுத்து 3 வீடுகளின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். 
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தீயணைப்பு வீரர்
சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் பகுதியில் உள்ள முல்லை நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு வீரராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ராமபிரியா. நேற்று முன்தினம் இவர் தன்னுடைய வீட்டை பூட்டி விட்டு அடுத்த வீதியில் உள்ள தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். 
ராமபிரியாவின் அடுத்த வீட்டில் வசிப்பவர் அய்யம்மாள். இவர் கடம்பூரில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள தன்னுடைய மகளை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் சென்றுவிட்டார்.  
இந்த நிலையில் ராமபிரியா நேற்று காலை தன்னுடைய வீட்டுக்கு வந்து உள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பீரோவை பார்த்தார். அப்போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 2 பவுன் சங்கிலி, கம்மல் மற்றும் வெள்ளி பொருட்கள், ரூ.10 ஆயிரத்தை காணவில்லை. 
மேலும் அருகில் உள்ள அய்யம்மாள் வீட்டின் பூட்டும் உடைக்கப்பட்டு கிடந்தது. அங்கிருந்த 1 பவுன் நகையை காணவில்லை என கூறப்படுகிறது. 
வலைவீச்சு
இதேபோல் சத்தியமங்கலம் முல்லை நகரை அடுத்த ஈ.பி.காலனியை சேர்ந்தவர் முருகன். இவர் எந்திரம் வைத்து தோசை மாவு அரைக்கும் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாகர்கோவிலில் உள்ள தன்னுடைய குலதெய்வ கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டார். இவருடைய  வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே சென்று உள்ளனர். ஆனால் வீட்டில் எதுவும் இல்லாததால் ஏமாற்றத்துடன் சென்று உள்ளனர். 
இதுகுறித்து கொடுத்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். 
சத்தியமங்கலம் பகுதியில் அடுத்தடுத்து நடந்த தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

மேலும் செய்திகள்