டெம்போ-ஸ்கூட்டர் மோதல் சிறுவன் பலி

தக்கலை அருகே டெம்போ மீது ஸ்கூட்டர் மோதிய விபத்தில் சிறுவன் பரிதாபமாக இறந்தான். தந்தை, மகன் படுகாயம் அடைந்தனர்.

Update: 2021-09-26 20:34 GMT
பத்மநாபபுரம்:
தக்கலை அருகே டெம்போ மீது ஸ்கூட்டர் மோதிய விபத்தில் சிறுவன் பரிதாபமாக இறந்தான். தந்தை, மகன் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கொத்தனார்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 39), கொத்தனார். இவருடைய மகன் அய்யப்பன். இவர்களது உறவினர் கணேசன் மகன் மணிகண்டன் (14). இவர்கள் கடந்த சில ஆண்டுகளாக குமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே குதிரைபந்திவிளை பகுதியில் குடும்பத்துடன் வாடகை வீட்டில் தங்கியிருந்து பணிபுரிந்தனர்.
இந்தநிலையில், நேற்று இரவு 7 மணியளவில் ராமலிங்கம் தனது மகன் அய்யப்பன் மற்றும் உறவினர் மகன் மணிகண்டன் ஆகியோரை அழைத்துக் கொண்டு கடைக்கு செல்வதற்காக வில்லுக்குறியில் இருந்து தக்கலை நோக்கி ஸ்கூட்டரில் புறப்பட்டார். 
டெம்போ மோதியது
குமாரகோவில் சந்திப்பு பகுதியில் சென்ற போது எதிரே ஒரு டெம்போ வந்தது. அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் ஸ்கூட்டர் மீது டெம்போ மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில், ஸ்கூட்டரில் பயணம் செய்த 3 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இதில் சிறுவன் மணிகண்டனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். 
ராமலிங்கமும், அய்யப்பனும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினர். உடனே அவர்களை அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
மேலும் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்தும் தக்கலை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்கூட்டர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற டெம்போவை தேடி வருகிறார்கள். இந்த விபத்தினால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.   

மேலும் செய்திகள்