வீட்டு பூட்டை உடைத்து 7¼ பவுன் நகை-பணம் திருட்டு
ஆரல்வாய்மொழி அருகே உள்ள வீட்டின் பூட்டை உடைத்து 7¼ பவுன் நகை மற்றும் பணத்தை திருடி சென்றவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
ஆரல்வாய்மொழி:
ஆரல்வாய்மொழி அருகே உள்ள வீட்டின் பூட்டை உடைத்து 7¼ பவுன் நகை மற்றும் பணத்தை திருடி சென்றவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
திருட்டு
ஆரல்வாய்மொழி அருகே உள்ள மாதவலாயம் பாத்திமா நகரை சேர்ந்தவர் முகமது வஜிகத் ராஜா (வயது 40). இவர் கத்தார் நாட்டில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இதனால் அவர் குடும்பத்துடன் அங்கேயே வசித்து வருகிறார். இவர் கடந்த ஜூலை மாதம் 31-ந் தேதி மாதவலாயம் வந்து விட்டு கத்தார் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார்.
முகமது வஜிகத் ராஜா வெளிநாடு சென்ற பின் அவரது வீட்டை அருகில் வசிக்கும் அவருடைய தாயார் பராமரித்து வருகிறார். இந்த நிலையில் முகமது வஜிகத் ராஜாவின் வீட்டுக்கு நேற்று முன்தினம் அவர் தாயார் சென்றார். அப்போது படுக்கை அறையில் உள்ள பீரோ திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பீரோவில் வைத்திருந்த நகையை பார்த்த போது கைச்செயின், மோதிரம், வளையல், கம்மல் என 7¼ பவுன் நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.35 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. வீட்டில் ஆள் நடமாட்டம் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
போலீசார் விசாரணை
இதுபற்றி முகமது வஜிகத் ராஜாவின் அண்ணன் தாருல்ஜின்னா ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில சப்&இன்ஸ்பெக்டர் மாரிச்செல்வம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தனர். அப்போது மர்ம நபர்கள் வீட்டின் பின்புறமாக மாடிக்கு சென்று அங்கிருந்த அறை கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தது தெரிய வந்தது.
மேலும் நாகர்கோவிலில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தனர்.
திருட்டு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருடர்களை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகிறார்கள்.