மளிகை கடையில் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் கைது
மளிகை கடையில் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஜெயங்கொண்டம்:
திருட்டு முயற்சி
ஆந்திர மாநிலம் ஒங்கோலு போத்தவரம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடபாபு (வயது 43). இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்திற்கு வந்து, ஜூப்ளி ரோட்டில் வாடகை பாத்திரக்கடை வைத்து நடத்தி வருகிறார். மேலும் பக்கத்து தெருவில் தனியார் ரைஸ்மில் சந்தில் மளிகை கடையும் வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கடந்த 15&ந் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணி அளவில் மர்மநபர்கள் 2 பேர் அவரது மளிகைக்கடையின் பூட்டை அறுத்தும், கேமராவை உடைத்தும் திருட முயன்றனர். அப்போது அந்த வழியாக இரவு நேர காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவலாளி(கூர்கா), இது குறித்து கடை உரிமையாளருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
சிறுவர்கள் கைது
இதற்கிடையே காவலாளியை பார்த்தவுடன் 2 பேரும் தப்பி ஓடிவிட்டனர். கடையின் உரிமையாளர் வெங்கடபாபு அங்கு வந்து பார்த்தபோது பூட்டு அறுக்கப்பட்டு, கேமரா உடைந்த நிலையில் இருந்தது. இது குறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் வெங்கடபாபு புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, மளிகைக் கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு, திருட்டு முயற்சியில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர்.
போலீசாரின் விசாரணையில், மளிகை கடையில் திருட்டு முயற்சியில் ஈடுபட்டது முறையே 17 மற்றும் 15 வயதுடைய 2 சிறுவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில், ஜெயங்கொண்டம் பகுதிகளில் பல்வேறு திருட்டுகளில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.