ஒரே நாளில் 1 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

மதுரையில் நேற்று 1200 இடங்களில் நடந்த சிறப்பு முகாம்களில் 1 லட்சத்து 6 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Update: 2021-09-26 20:16 GMT
மதுரை, 
மதுரையில் நேற்று 1200 இடங்களில் நடந்த சிறப்பு முகாம்களில் 1 லட்சத்து 6 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தடுப்பூசி திருவிழா
கொரோனா 2-வது அலை கடுமையாக இருந்த காலத்தில் அதனை கட்டுப்படுத்துவதற்கு முக்கிய ஆயுதமாக இருந்தது கொரோனா தடுப்பூசி தான். தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கிய பின்னர் கொரோனா பரவல் வேகம் கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது 18 வயதை கடந்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் கடந்த 12&ந்தேதி, 19&ந்தேதி என தொடர்ந்து 2 வாரம் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மெகா தடுப்பூசி திருவிழா சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அன்றைய தினங்களில் வழக்கத்தை விட அதிகமான நபர்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தினர். மதுரையில் நடந்த முகாம்களிலும் அதிக அளவில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.
மதுரையில் 12&ந்தேதி நடந்த முகாம்களில் 1 லட்சத்து 15 ஆயிரம் பேருக்கும், 19&ந்தேதி நடந்த தடுப்பூசி முகாம்களில் 72 ஆயிரத்து 50 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன் மூலம் மதுரையில் தடுப்பூசி செலுத்தியவர்களின் சதவிகிதம் வேகமாக அதிகரித்தது.
1200 இடங்களில் முகாம்
இதற்கிடையே தமிழகம் முழுவதும் மீண்டும் 3&வது வாரமாக நேற்றும் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. மதுரையிலும் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வாக்குச்சாவடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் என 1200 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் சிறப்பு முகாம்கள் நடந்தது. இந்த முகாம்கள் நேற்று காலை முதல் இரவு 7 மணி வரை நடந்தது. இந்த சிறப்பு முகாம்களில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஆர்வத்துடன் முதல் மற்றும் 2&வது தவணை தடுப்பூசிகளை செலுத்தினர்.
நேற்று நடந்த இந்த சிறப்பு முகாம்களில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 18 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் நேற்று ஒரு நாளில் மட்டும் புறநகரில் 62 ஆயிரத்து 606 பேர், நகர் பகுதியில் 39 ஆயிரத்து 982பேர், அரசு மருத்துவமனைகளில் 3430 பேர் தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்கள். அதில், 70 ஆயிரத்து 398 பேருக்கு முதல் தவணையும், 35 ஆயிரத்து 620 பேருக்கு 2&வது தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்