போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகை
இளையான்குடி போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இளையான்குடி,
இளையான்குடி போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொய் புகார்
இளையான்குடி அருகே உள்ள லெட்சுமிபுரத்தை சேர்ந்த பொதுமக்கள், சுயஉதவிக்குழு பெண்கள் நேற்று திரண்டு இளையான்குடி போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறும் போது,
தங்கள் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண் கொடுத்த புகாரின் பேரில் கிராமத்தை சேர்ந்த சிலர் மீது போலீசார் பொய் வழக்கு போட்டு விசாரணைக்கு அழைத்து உள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்து தான் முற்றுகையில் ஈடுபட்டோம். ஊரில் அந்த பெண் குடும்பத்தினர் ஆக்கிரமிப்பு செய்ததால் கோவில் திருவிழாவில் சேர்க்கவில்லை. அதனால் போலீசில் புகார் தெரிவித்து பிரச்சினையை ஏற்படுத்துகிறார். அவர் ஆக்கிரமிப்பு செய்ததை வருவாய்த்துறையினர் கைப்பற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.
எச்சரிக்கை
இதையடுத்து போலீசார், புகார் தெரிவித்த பெண்ணிடம் கோவில் பிரச்சினையில் தலையிடக்கூடாது என எச்சரித்தனர். அந்த பெண் ஆக்கிரமிப்பு விவகாரத்தை வருவாய்த்துறை வசம் புகார் செய்து நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்களிடம் அறிவுறுத்தினர். இதையடுத்து கிராம மக்கள் முற்றுகையை கைவிட்டனர்.