வெள்ளத்தில் மூழ்கிய பயிர்களை ஆய்வு செய்த அதிகாரிகள்
வெள்ளத்தில் மூழ்கிய பயிர்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
லாலாபேட்டை,
கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. இதன்காரணமாக லாலாபேட்டையை சுற்றியுள்ள விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கியது. மேலும், நெற்பயிர்கள், வாழைகள் வெள்ளத்தில் மூழ்கி சேதம் அடைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
இதையடுத்து, சேதம் அடைந்த விவசாய பயிர்களை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது காவிரியிலிருந்து கிளை வாய்க்கால்களுக்கு செல்லும் தண்ணீரை குறைத்தும், கால்வாய்களில் வடிகால் ஏற்பாடுகளை செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். தற்போது தண்ணீர் வடிந்து உள்ளது. இந்த ஆய்வின்போது கிருஷ்ணராயபுரம் தாசில்தார் வெங்கடேசன், மண்டல துணை தாசில்தார் மதியழகன், வருவாய் ஆய்வாளர் கதிர்வேல் ராஜன், வேளாண்மை அலுவலர் நித்தியா, கிராம நிர்வாக அலுவலர் ஜெயலட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர்.