தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டியில் வௌிவந்துள்ள செய்திகள் வருமாறு:-
தடுப்புச்சுவரை அகற்ற வேண்டும்
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே மேலமுக்குட்டு மெயின் சாலை உள்ளது. இந்த சாலையின் நடுவே விபத்துகளை தவிர்க்கும் விதமாக சிறிய தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டது. தற்போது இந்த தடுப்புசுவர் பராமரிப்பின்றி பாதியளவு மட்டுமே சாலை நடுவே சாலையோடு சாலையாக காட்சி அளிக்கிறது. இதனால் தடுப்புச்சுவர் இருப்பது தெரியாமல் இருசக்கர வாகனங்கள், கனரக வாகனங்களில் வருபவர்கள்அடிக்கடி விபத்துகளை சந்தித்து வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுப்புச்சுவரை அகற்ற வேண்டும்.
உசேன், செம்பனார்கோவில்
நாய்கள் தொல்லை
நாகப்பட்டினம் மாவட்டம் வெளிப்பாளையம் பகுதியில் ராமநாயக்கன் குளத்தெரு உள்ளது. இந்த தெருவில் 70&க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபகாலமாக இந்த தெருவில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. மேலும், சாலையில் நடந்து செல்லும் பள்ளி குழந்தைகள், பெரியவர்களை நாய்கள் கடித்து விடுகின்றனர். அதுமட்டுமின்றி இருசக்கர மற்றும் கார்களில் செல்பவர்களை நாய்கள் துரத்தி செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் ராமநாயக்கன் குளத்தெரு பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் சாலையில் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருவில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ருகாசினி, நாகப்பட்டினம்
வேகத்தடை உயரம் குறைக்கப்படுமா?
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் திருவாஞ்சியம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள பஸ் நிலையம் அருகே பொதுமக்களின் நலனுக்காக வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வேகத்தடை மிகவும் பெரியதாக உயரம் அதிகமாக போடப்பட்டுள்ளது. இதனால் இருசக்கர மற்றும் கனரக வாகனங்களில் வருபவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி தவிக்கின்றனர். அதுமட்டுமின்றி கார்கள் வேகத்தடையை கடந்து செல்லும் போது காரின் அடிப்பகுதி வேகத்தடையில் உரசி கார்கள் சேதமடைகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உயரமாக காணப்படும் வேகத்தடையின் உயரத்தை குறைப்பார்களா? என்பதே அந்த பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
யூசுப், திருவாஞ்சியம்
மின்விளக்கு வசதி வேண்டும்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பகுதியில் விளநகர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் எல்லை பகுதி நுழைவுவாயிலில் காத்தாயி அம்மன் கோவிலும், அதனை அடுத்து வழித்துணை அய்யனார் கோவிலும் உள்ளன. இந்த கோவிலுக்கு உள்ளூர் மட்டும் இன்றி வெளிமாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர். இந்த 2 கோவிலுக்கும் நடுவே உள்ள பகுதியில் நெடுஞ்சாலை இருந்தும் மின் விளக்குகள் அமைக்கப்படாமல் உள்ளது.இதனால் இருளை பயன்படுத்தி கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் சமூக விரோதிகள் வழிப்பறியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் மின்விளக்கு வசதி செய்து தர வேண்டும்.
ராஜன்செல்வா, மயிலாடுதுறை
மரங்களை உரசி செல்லும் மின்கம்பிகள்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரம் காளவாய்கரை நகரில் மின்கம்பிகள் மரக்கிளைகளை உரசியபடி செல்கிறது. இதனால் பலத்த காற்று அடிக்கும்போது மின் கம்பிகளில் மரம் உராயும்போது மின் தடை ஏற்படுகிறது. எனவே மின்கம்பிகள் மீது மரங்கள் கிளைகள் உராய்வு ஏற்படாமல் இருக்க நிரந்தர தீர்வு காணப்படுமா? என்பது அந்த பகுதி பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
பொதுமக்கள் மன்னார்குடி