சொத்து தகராறில் விவசாயி வெட்டிக்கொலை

நத்தம் அருகே சொத்து தகராறில் விவசாயி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தந்தை&மகனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-09-26 17:16 GMT
நத்தம் : 

சொத்து தகராறு
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள கரந்தமலை பள்ளத்துக்காடு கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளை (வயது 65). விவசாயி. அதே ஊரை சேர்ந்தவர் ராசு (50). இவர்கள் 2 பேரும் உறவினர்கள். இவர்களுக்கிடையே சொத்து தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. 

இந்தநிலையில் நேற்று காலை அந்த பகுதியில் உள்ள தனது தோட்டம் வழியாக வெள்ளை நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ராசுவின் 17 வயது மகன், கல்லை எடுத்து வெள்ளை மீது எறிந்ததாக கூறப்படுகிறது. இதனை வெள்ளை தட்டி கேட்டதாக தெரிகிறது. இதனையடுத்து ராசு மற்றும் அவருடைய குடும்பத்தினர் அங்கு வந்து வெள்ளையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதன்பிறகு வெள்ளை அங்கிருந்து புறப்பட்டார். அவரை ராசு, அவருடைய மகன் அர்ஜூனன் (30) ஆகியோர் விரட்டினர். இதை பார்த்து பயந்துபோன வெள்ளை வீட்டுக்கு வேகமாக ஓடினார். ஆனால் அவரை வழிமறித்து 2 பேரும் தாக்கினர். 

வெட்டி படுகொலை 
பின்னர் அர்ஜூனன் தான் வைத்திருந்த அரிவாளால் வெள்ளையை சரமாரியாக வெட்டினார். இதில் அவர் தலை, கழுத்து மற்றும் கை பகுதியில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து வெள்ளை பரிதாபமாக இறந்தார். 

அவருடைய அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்து வெள்ளை மகன் பழனிச்சாமி (20) ஓடி வந்தார்.  அவரையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. ஆத்திரத்தில் பழனிச்சாமியையும் அரிவாளால் வெட்டினர். படுகாயமடைந்த பழனிச்சாமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

தந்தை-மகன் கைது
இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன், நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் வெள்ளையின் உடலை கைப்பற்றி, டோலி கட்டி மலைப்பகுதியில் இருந்து கீழே கொண்டு வந்தனர். 

அதன்பின்பு அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ராசு, அர்ஜூனன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்து தகராறில், விவசாயி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.    

மேலும் செய்திகள்