ஒரு பெண்ணின் வாழ்க்கையை புரட்டிப்போட்ட ‘காலணி’

வாழ்க்கையில் சந்திக்கும் அவமானங்கள்தான் ஒருவரை உச்சத்துக்குக் கொண்டு போய் நிறுத்தவும் காரணமாக அமைகின்றன.

Update: 2021-09-26 13:45 GMT
இதற்கு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார் மணிப்பூரைச் சேர்ந்த மொய்ரங்க்தெம் முக்தாமணி தேவி. தன் மகளுக்கு ‘ஷூ’ வாங்கித் தர முடியவில்லையே என்ற வேதனையே, அவரை காலணி விற்பனையில் கலக்கும் தொழில்முனைவோராக மாற்றியிருக்கிறது. சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, கனவுகள் மட்டுமே காணமுடியும் என்ற நிலையில் இருந்த தேவி, இன்றைக்கு அந்த கனவைத் துரத்தி பிடித்து வெற்றியை சுவைத்திருக்கிறார்.

“நான் பிறந்த சில ஆண்டுகளிலேயே தந்தை இறந்துவிட்டார். தாயார்தான் என்னை வளர்த்து ஆளாக்கினார். என் பள்ளி வகுப்பு நண்பரையே திருமணம் செய்துகொண்டேன். அப்போது எனக்கு வயது 17. குடும்ப செலவுகளை சமாளிக்க வயல்களில் சென்று வேலை பார்த்து வந்தேன். அதோடு, பைகள், ஹேர் பேண்ட் போன்ற கைவினைப் பொருட்களையும் தயார் செய்து இரவு நேரங்களில் விற்பனை செய்து வந்தேன்.

29 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தை சமாளிக்க முடியாத ஏழைக் குடும்பத்தலைவியாகவே இருந்தேன். 1989-ம் ஆண்டு என் மகளுக்கு ஷூ வாங்கிக் கொடுக்கக் கூட என்னால் முடியவில்லை. இது என் மனதை மிகவும் பாதித்தது. நானே ஷூ தயாரித்துக் கொடுத்தேன்.

இதுபோன்ற ஷூ போட்டுக்கொண்டு சென்றால் பள்ளியில் அனுமதிப்பார்களா? என்று பயந்தாள். ஆனால், பள்ளிக்குச் சென்ற மகளின் ஷூவைப் பார்த்து அவளது ஆசிரியை வியப்படைந்தார். இந்த ஷூவை எங்கு வாங்கினாய்? எனக்கும் ஒரு ஜோடி வாங்கித் தரமுடியுமா என்று கேட்டார். அந்த நிகழ்வுதான் என்னை தொழில்முனைவோராக்கியது.

1990-ம் ஆண்டு ‘முக்தா ஷூஸ்’ என்ற பெயரில் கையால் தயாரித்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மெக்ஸிகோ மற்றும் சில ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஷூக்களை அனுப்பினேன். என் நிறுவனம் பிரபலமடைந்தாலும், மாவட்ட தொழில் மையத்தில் நிறுவனத்தைப் பதிவு செய்தேன்.

தாயாக இருந்துகொண்டு தொழிலையும் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. 3 குழந்தைகளை நன்றாகப் படிக்க வைத்தேன். சிறிது காலத்தில் என் நிறுவனம் சர்வதேச அளவில் விரிவடைந்தது. விருதுகளும், பாராட்டுகளும் குவிந்தன.

இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்குப் பயிற்சி கொடுத்துள்ளோம். ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கையாலேயே தைத்த ஷூக்களை எங்கள் ஆலையில் தயாரிக்கிறோம். இதன் விலையை ரூ.200 முதல் 800 வரை நிர்ணயித்துள்ளோம். எங்களது ஷூக்களும், செருப்புகளும் இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது.

சமுதாயத்தை மாற்றியதற்கான விருது 2018-ம் ஆண்டு எனக்குக் கிடைத்தது. மேலும் பல விருதுகளைப் பெற்றுள்ளேன். ஆரம்பத்தில் இருந்து என்னுடன் பணியாற்றிக் கொண்டிருக்கும் பெண்களுக்கு இந்த விருதுகளை அர்ப்பணிக்கிறேன்” என்றார்.

மேலும் செய்திகள்