சிங்கார சென்னை ‘2.0’ திட்டத்தின் கீழ் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் விழிப்புணர்வு சைக்கிள் பயணம்

சிங்கார சென்னை ‘2.0’ திட்டத்தின் கீழ் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் விழிப்புணர்வு சைக்கிள் பயணம் நேற்று நடந்தது. இதில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Update: 2021-09-26 10:42 GMT
சென்னை,

சிங்கார சென்னை ‘2.0’ திட்டத்தின் நலமிகு சென்னை என்ற அடிப்படையில் பொதுமக்களின் உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் வகையில் சென்னையில் ஒருவார காலத்துக்கு சைக்கிள் பயணம், பூங்காக்களில் உடற்பயிற்சி மேற்கொள்ளுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.

இந்தநிலையில் பெருநகர சென்னை மாநகராட்சியுடன் சென்னை சீர்மிகு நகரம் இணைந்து பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் பெண்களுக்கான விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை நேற்று தொடங்கியது. இதனை மாநகராட்சி துணை கமிஷனர்(கல்வி) டி.சினேகா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இரவு 10 மணிக்கு டி.ஜி.பி. அலுவலகத்திலிருந்து தொடங்கப்பட்ட சைக்கிள் பயணம் எழும்பூர், ‘ஸ்கை வாக்’, நெல்சன் மாணிக்கம் சாலை, கல்லூரி சாலை, ஜெமினி, ராதாகிருஷ்ணன் சாலை வழியாக மீண்டும் டி.ஜி.பி. அலுவலகத்தில் வந்து முடிவடைந்தது.

200-க்கும் மேற்பட்டோர்

இந்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியில் கலந்து கொள்ள 170 பெண்கள் பதிவு செய்திருந்தனர். ஆனாலும், 200-க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர். சைக்கிள் பயணத்தின் போது, கொரோனா தடுப்பூசி செலுத்துதல் மற்றும் தீவிர தடுப்பூசி முகாம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளுடன் அவர்கள் பயணம் மேற்கொண்டனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) வேளச்சேரி 5 பர்லாங் சாலை, மெரீனா காந்தி சிலை, அண்ணாநகர் 6-வது அவென்யூ, ஐ.சி.எப். நியூ ஆவடி சாலை, பெசன்ட்நகர் ராஜாஜி பவன், நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி, ரிப்பன் கட்டிடத்தின் சிக்னல், டி.ஜி.பி. அலுவலகம் உள்பட 10 இடங்களில் சைக்கிள் பயணம் காலை 6 மணி முதல் நடைபெற உள்ளது.

அதேபோல் பொதுமக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் இன்று முதல் அக்டோபர் 3-ந்தேதி வரை சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 29 முக்கிய பூங்காக்களில் சிலம்பம், கராத்தே, யோகா மற்றும் ஜூம்பா போன்ற விளையாட்டு பயிற்சிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.

‘வாட்ஸ்-அப்’ எண்

இந்த 29 பூங்காக்கள் குறித்த விவரங்களை மாநகராட்சியின் https://ch-e-n-n-a-i-c-o-r-p-o-r-at-i-on.gov.in/gcc/pdf/Pa-rks&list.pdf என்ற இணையதளத்தில் பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்.

மேலும், விருப்பமுள்ள தனியார் உடற்பயிற்சி கூடம் வைத்துள்ளவர்கள் தங்களிடம் உடற்பயிற்சி மேற்கொள்ளும் நபர்களின் பயிற்சி வீடியோக்களை 9445190856 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு அனுப்பலாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்