தாளவாடி அருகே ஆட்டை அடித்துக்கொன்ற சிறுத்தை

தாளவாடி அருகே ஆட்டை சிறுத்தை அடித்துக்கொன்றது.

Update: 2021-09-25 21:21 GMT
தாளவாடி
தாளவாடி, வனச்சரகத்தில் ஏராளமான புலி, சிறுத்தை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தை அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து ஆடு, மாடு மற்றும் நாய்களை அடித்துக்கொல்லும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. சிறுத்தையை பிடிக்க வனத்துறை சார்பில் கூண்டு வைக்கப்பட்டது. எனினும் சிறுத்தை சிக்கவில்லை. 
தாளவாடியை அடுத்த நெய்தாளபுரத்தை சேர்ந்தவர் சாந்தப்பா (வயது 60). ஆடுகள் வளர்த்து வருகிறார். இவர் வழக்கம்போல் அந்த பகுதியில் உள்ள மானாவாரி நிலத்தில் தன்னுடைய ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். மேலும் ஒரு ஓரமாக உட்கார்ந்திருந்தார். மாலை 5 மணி அளவில் ஆடுகள் திடீரென மிரண்டு ஓடியது கண்டு திடுக்கிட்டு எழுந்து பார்த்தார். அப்போது சிறுத்தை ஒன்று ஆட்டை கடித்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டு கத்தினார். அவருடைய சத்தம் கேட்டு ஆட்டை விட்டு விட்டு வனப்பகுதிக்குள் ஓடிச்சென்று சிறுத்தை மறைந்துவிட்டது. இதுபற்றி தாளவாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிறுத்தை அடித்துக்கொன்ற ஆட்டை பார்வையிட்டனர். 
இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்