பெண்ணிடம் ரூ.8 லட்சம் தங்க நகைகள் அபேஸ்

பாலீஷ் போட்டு தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.8 லட்சம் தங்க நகைகள் அபேஸ் செய்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2021-09-25 20:35 GMT
சிக்பள்ளாப்பூர்: பாலீஷ் போட்டு தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.8 லட்சம் தங்க நகைகள் அபேஸ் செய்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். 

பாலீஷ் போட்டு தருவதாக...

சிக்பள்ளாப்பூர் (மாவட்டம்) தாலுகாவில் குண்டலகுர்க்கி கிராமத்தை சேர்ந்தவர் சென்னம்மா. அவருடன் மருமகள் சுனந்தம்மாவும் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த கிராமத்துக்கு மோட்டார் சைக்கிளில் 2 மர்மநபர்கள் வந்துள்ளனர். அவர்கள் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று வீட்டில் உள்ள பெண்களிடம் குறைந்த செலவில் நகைகளுக்கு பாலீஷ் போட்டு மாற்றி தருவதாக கூறி, ஊருக்குள் சுற்றி வந்துள்ளனர்.

இந்த நிலையில், சென்னம்மாவின் வீட்டுக்கு முன் வந்த மர்ம நபர்கள் தங்க நகைகளுக்கு குறைந்த செலவில் பாலீஷ் போட்டு தருவதாக தெரிவித்துள்ளனர். அவர்களது பேச்சை நம்பிய சென்னம்மா மற்றும் இவரது மருமகள் சுனந்தம்மா இருவரும், வீட்டில் இருந்த வெள்ளி சாமி சிலை, 4 தங்க வளையல், தங்க தாலி, 2 தங்க சங்கிலி ஆகியவற்றை கொடுத்தனர்.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

அவற்றை பெற்றுக்கொண்ட மர்ம நபர்கள் அவற்றுக்கு பாலீஷ் செய்துள்ளனர். அப்போது குடிப்பதற்கு தண்ணீர் வேண்டும் என்று சென்னம்மாவிடம் கேட்டுள்ளனர். அவர் வீட்டுக்குள் சென்றதும் அந்த மர்மநபர்கள் நகைகள் மற்றும் சாமி சிலை ஆகியவற்றை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடி விட்டனர். பறி போன நகைகளின் மதிப்பு ரூ.8 லட்சம் ஆகும். 
தண்ணீர் கொண்டு வந்த பார்த்த சென்னம்மா அவர்களை காணாமல் திகைத்தார். பின்னர்தான் அவர் ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து சுனந்தம்மா சிக்பள்ளாப்பூர் நகர போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்