மேலும் 24 ரவுடிகள் அதிரடி கைது ஆயுதங்கள் பறிமுதல்
வேலூர் மாவட்டத்தில் மேலும் 24 ரவுடிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் மேலும் 24 ரவுடிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதிரடி சோதனை
தமிழகம் முழுவதும் குற்றச்செயல்களில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள ரவுடிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். வேலூர் மாவட்டத்திலும் ஏராளமான ரவுடிகள் போலீசாரிடம் பிடிபடாமல் தலைமறைவாக உள்ளனர். அவர்களை கைது செய்ய வேலூர் சரக டி.ஐ.ஜி.பாபு மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் ஆகியோர் உத்தரவிட்டனர். அதன்பேரில் கடந்த 23&ந் தேதி இரவு முழுவதும் அதிரடி சோதனை நடந்தது.
தங்கும் விடுதிகள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் எனப் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதுதவிர வாகனச் சோதனை, ரோந்துப்பணி மற்றும் குற்றவாளிகளின் வீடுகளிலும் சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது வழிப்பறி, திருட்டு, அடிதடி போன்ற வழக்குகளில் தலைமறைவாக இருந்த ரவுடிகள், வழக்குகளில் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்தவர்கள் என 48 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கை நேற்று முன்தினமும் தொடர்ந்தது. அதில் மேலும் 24 ரவுடிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
ஆயுதங்கள் பறிமுதல்
வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதன்விவரம் வருமாறு:
கைது செய்யப்பட்டவர்களில் தோட்டப்பாளையத்தைச் சேர்ந்த ராம்குமார் (வயது 22), சேண்பாக்கத்தைச் சேர்ந்த சிவசெல்வம் (31) ஆகியோர் கொலை வழக்கு ஒன்றில் தொடர்புடையவர்கள் ஆவர். மேட்டுஇடையம்பட்டி அருணாசலம் (24), அதேபகுதியைச் சேர்ந்த படையப்பா (22) ஆகியோர் ரவுடி வசூர் ராஜாவின் கூட்டாளிகள் ஆவர். இவர்கள் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கஞ்சா வழக்கில் தொடர்புடைய வேலூர் டிட்டர்லைன் பகுதியைச் சேர்ந்த முகமது யூசுப் என்பவரும் கைது செய்யப்பட்டார். இவர்களிடம் இருந்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் தலைமறைவாக உள்ள போஸ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். பழைய குற்றவாளிகள் பலரிடம் நன்னடைத்தை உறுதிமொழி சான்று பெறப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.