சேலம், செப்.26-
புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது.
சிறப்பு பூஜை
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல முடியாத காரணத்தால் வெளியில் நின்றவாறு சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள்.
இந்நிலையில், புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி சேலம் பகுதிகளில் உள்ள பெருமாள் கோவிலில் நேற்று காலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்பட்டது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் யாரும் பூஜையில் பங்கேற்க அனுமதிக்கவில்லை. இதனால் பக்தர்கள் கோவில் முன்பு கற்பூரம் மற்றும் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.
பெருமாள் கோவில்
சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை பெருமாள் கோவிலில் நேற்று காலை பக்தர்கள் இன்றி பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. அதேசமயம், பக்தர்கள் கோவிலுக்கு செல்லாமல் வெளியில் நின்றவாறு தரிசனம் செய்ததை காணமுடிந்தது.
இதேபோல், சேலம் ஆனந்தா இறக்கம் பகுதியில் உள்ள லட்சுமி நாராயணசுவாமி கோவில், பட்டைகோவில், வரதராஜ பெருமாள் கோவில், செவ்வாய்பேட்டை பாண்டுரங்கநாதர் கோவில், பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில், சின்னதிருப்பதி வரதராஜ பெருமாள் கோவில், நாமமலை பெருமாள் கோவில் உள்பட சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் நேற்று புரட்டாசி 2&வது சனிக்கிழமையையொட்டி பக்தர்கள் இன்றி சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்பட்டது.