தாயும், மகளும் 72 மணி நேரம் தொடர்ந்து கை குலுக்கி சாதனை
கரூரில் தாயும், மகளும் 72 மணி நேரம் தொடர்ந்து கை குலுக்கி ஆசியன் புக் ஆப் ரெக்கார்ட்சில் இடம் பெற்றனர்.
கரூர்,
ஆசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனைக்காக கரூரை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஸ்ரீதர்ஷினி, தனது தாய் பத்மாவதியுடன் இணைந்து 72 மணி நேரம் தொடர்ந்து கை குலுக்கும் சாதனை நிகழ்ச்சியை கரூர் நகரத்தார் சங்கத்தில் கடந்த 22-ந்தேதி காலை 11 மணிக்கு தொடங்கினர். இந்த நிகழ்ச்சியை ஈஸ்வரமூர்த்தி, திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனியப்பன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து 72 மணி நேரம் ஸ்ரீதர்ஷினியும், பத்மாவதியும் உண்ணாமல், உறங்காமல் கை குலுக்கும் சாதனையை தொடர்ந்தனர். இந்தநிலையில் நேற்று காலை 11 மணிக்கு கை குலுக்கும் சாதனை நிகழ்வை நிறைவு செய்தனர். பின்னர் நடுவர்களான ஹரீஸ் மற்றும் தினேஷ்குமார் ஆகியோர் ஸ்ரீதர்ஷினிக்கும், பத்மாவதிக்கும் ஆசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனையை அறிவித்து சான்றிதழை வழங்கினர்.