கீரனூர் அருகே குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் பலி
கீரனூர் அருகே குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
கீரனூர்:
பெரிய குளம்
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. கீரனூரை அடுத்த குளத்தூரை சேர்ந்தவர் மாரியம்மாள். இவரது கணவர் முருகன் இறந்து விட்டார். இந்நிலையில் தம்பி தமிழ்ச்செல்வனுடன் சேர்ந்து பாஸ்ட் புட் கடை நடத்தி வருகிறார். மாரியம்மாளின் மகன் பிரகதீஸ்வரன் (வயது 13). இவர், தஞ்சாவூர் நகராட்சி பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளிகள் விடுமுறை விடப்பட்டுள்ளதால் அவர் குளத்தூருக்கு வந்தார்.
இந்நிலையில் நேற்று மதியம் அந்த பகுதி சிறுவர்களுடன் சேர்ந்து குளத்தூர் பெரிய குளத்தில் பிரகதீஸ்வரன் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் நீச்சல் தெரியாத பிரகதீஸ்வரன் தண்ணீரில் மூழ்கியுள்ளான்.
பலி
இதையடுத்து அங்கிருந்தவர்கள் குளத்தில் தேடிப் பார்த்து சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக கீரனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். தகவல் அறிந்து வந்த கீரனூர் போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே மருத்துவமனைக்கு வந்த மாரியம்மாள், மகன் உடலை பார்த்து கதறி அழுதது பார்ப்பவரையும் கண்கலங்க வைத்தது. இதுகுறித்து கீரனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீரனூர் பகுதியில் கடந்த சில நாட்களாக துடையூர் ரெயில்வே மேம்பாலத்தில் தேங்கி நின்ற தண்ணீரில் காருடன் மூழ்கி அரசு டாக்டர் சத்யா பலியானார். மருங்கிப்பட்டி கிராமத்தில் கல்குவாரி குட்டையில் தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கி ராணி, அவரது பேத்தி நதிலாஸ்ரீ ஆகியோர் பலியானார்கள் குறிப்பிடத்தக்கது.