மனைவி மீது கடப்பாரையால் தாக்குதல்: போலீசுக்கு பயந்து தொழிலாளி கழுத்தை அறுத்து தற்கொலை
திருச்செங்கோடு அருகே மனைவியை கடப்பாரையால் தாக்கிய தொழிலாளி போலீசுக்கு பயந்து கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.
எலச்சிபாளையம்:
மனைவி மீது தாக்குதல்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே ஆண்ராப்பட்டி அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் பழனி (வயது 63). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி லட்சுமி (60). ஆடு மேய்த்து வருகிறார். பழனிக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்&மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் பழனி மதுபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது அவருக்கும், லட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அவர் வீட்டில் இருந்த கடப்பாரையால் லட்சுமியை தாக்கினார். இதில் மண்டை உடைந்து லட்சுமி ரத்த வெள்ளத்தில் சரிந்தார். சிறிது நேரத்தில் அவர் மயங்கினார்.
கழுத்தை அறுத்து தற்கொலை
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பழனி மனைவி இறந்து விட்டதாக நினைத்தார். மேலும் கொலை வழக்கில் போலீசார் தன்னை கைது செய்து விடுவார்கள் என்று எண்ணினார். இதனால் பயந்து போன அவர் அங்கிருந்த கத்தியால் தனது கழுத்தை அறுத்து கொண்டார். அக்கம் பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக 2 பேரும் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பழனி பலியானார். லட்சுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செங்கோடு ரூரல் போலீசார் பழனி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மனைவியை தாக்கிய தொழிலாளி, போலீசுக்கு பயந்து கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருச்செங்கோடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.