புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை-வெளியில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம்
புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் வெளியில் நின்றவாறு சாமி தரிசனம் செய்தனர்.
நாமக்கல்:
புரட்டாசி சனிக்கிழமை
நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்த கோவிலில் தினமும் அபிஷேகம் மற்றும் பூஜை நடந்து வருகிறது. நேற்று புரட்டாசி மாதம் 2-வது சனிக்கிழமையையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்பட்டது.
இதையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, சாமிக்கு 1008 வடைமாலை சாத்தப்பட்டது. பின்னர் பட்டாச்சாரியார்கள் குடம், குடமாக பால் ஊற்றி ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து எண்ணெய், பஞ்சாமிர்தம், மஞ்சள், சீயக்காய் உள்ளிட்ட நறுமண பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர் அலங்காரத்தில் ஆஞ்சநேயர் அருள்பாலித்தார்.
சாமி தரிசனம்
கொரோனா பரவலை தடுக்க நாமக்கல் மாவட்டத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் நேற்று பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. எனவே பக்தர்கள் வெளியில் நின்றவாறு சாமி தரிசனம் செய்து விட்டு செல்வதை பார்க்க முடிந்தது.