கொடைக்கானல் சுற்றுலா இடங்களில் இருந்து இடம் பெயர்ந்த காட்டு யானைகள்

கொடைக்கானல் சுற்றுலா இடங்களில் உலா வந்த காட்டு யானைகள் வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்தன.

Update: 2021-09-25 17:03 GMT
கொடைக்கானல்:
Ôமலைகளின் இளவரசிÕயான கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தருகின்றனர். அவர்கள் நகரையொட்டி வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களான மோயர் பாயிண்ட், பைன் மரக்காடுகள், குணா குகை, பில்லர் ராக் உள்ளிட்ட பகுதிகளை கண்டுரசிப்பார்கள். இந்தநிலையில் கொடைக்கானல் வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களில் கடந்த சில நாட்களாக 3 காட்டு யானைகள் குட்டியுடன் உலா வந்தன. இதனால் சுற்றுலா இடங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. 
இந்தநிலையில் நேற்று யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் மீண்டும் ஈடுபட்டனர். இதையடுத்து காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் இடம்பெயர தொடங்கின. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி அந்த யானைகள் பேரிஜம் ஏரிக்கு செல்லும் தர்கா பகுதியில் முகாமிட்டிருந்தது. இதனால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் சென்றுவிடும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், சுற்றுலா இடங்களில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள் மோயர் பாயிண்ட் பகுதியில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் இடம்பெயர்ந்துள்ளன. இதனை கண்காணிக்கும் பணியில் வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவை தற்போது பேரிஜம் ஏரி பகுதியை நோக்கி சென்றுவிட்டதால் இன்று காலை முதல் சுற்றுலா இடங்களை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றனர். கடந்த சில நாட்களாக சுற்றுலா இடங்களில் காட்டு யானைகள் உலா வந்ததால் பொதுமக்கள் பீதியுடன் நடமாடி வந்தனர். தற்போது அவை வனப்பகுதிக்குள் சென்றுவிட்டதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். 

மேலும் செய்திகள்