மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி பலி

ஓட்டப்பிடாரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்டதில் தொழிலாளி பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2021-09-25 16:23 GMT
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்டதில் தொழிலாளி பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

கூலித்தொழிலாளி

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்புத்தூர் மேலமடத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகன் பொன்மாடசாமி (வயது 23). கூலித்தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் மாலையில் தனது நண்பர் முருகேசன் மகன் அசோக்குமார் (16) என்பவருடன் எப்போதும் வென்றான் அருகே சோழபுரத்தில் உள்ள வங்கிக்கு சென்றார். பின்னர் அங்கு இருந்து 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு வந்து கொண்டு இருந்தனர்.

குமரெட்டியாபுரம் அருகே வரும் போது, எதிரே கவர்னகிரியில் இருந்து மஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஜெயராஜ் மகன் கருப்பசாமி (25) என்பவர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். கண் இமைக்கும் நேரத்தில் 2 மோட்டார் சைக்கிள்களும் மோதிக் கொண்டன.

பலி

இதில் மோட்டார் சைக்கிள்களில் இருந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஓட்டப்பிடாரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே பொன்மாடசாமி பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு இருந்து கருப்பசாமி மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த விபத்து குறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்