பொதுமக்கள் சேவைக்காக 24 மணி நேரமும் ரோந்து வாகனங்கள் செயல்படும் - போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் பேச்சு
பொதுமக்கள் சேவைக் காக 24 மணி நேரமும் ரோந்து வாகனங்கள் செயல்படும் என போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் கூறினார்.
நாகப்பட்டினம்,
நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று 15 ரோந்து வாகனங்கள் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் தலைமை தாங்கி ரோந்து வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுகுமார் முன்னிலை வகித்தார்.
இதை தொடர்ந்து நாகை நகர் பகுதிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், நாகை பப்ளிக் ஆபிஸ் ரோடு, நீலா வீதிகள், நாகை - நாகூர் மெயின் ரோடு கடைத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் வாகனங்களில் ரோந்து பணிகளில் ஈடுபட்டனர்.
நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் பேசும் போது கூறியதாவது:-
நாகை மாவட்டத்துக்கு ரோந்து பணியை தீவிரப்படுத்துவதற்காக 15 ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள 15 போலீஸ் நிலையங்களுக்கு தலா ஒரு வாகனம் என ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ரோந்து வாகனங்கள் 24 மணி நேரமும் பொதுமக்கள் சேவைக்காக செயல்படும். ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார், பொதுமக்களின் அழைப்பிற்கு உடனடியாக சென்று, குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும்.
இந்த ரோந்து வாகனங்களை அதிகப்படுத்தப்பட்டுள்ளதன் மூலம் பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் எந்தநேரத்திலும் தொடர்பு கொண்டாலும், உடனடியாக உதவி செய்ய ரோந்து வாகன போலீசார் காத்திருப்பார்கள். குற்றங்கள் நடைபெறுவதை தடுக்க ரோந்து வாகனங்கள் முக்கிய பங்காற்றும் என்றார். இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.