திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மூதாட்டி சாவு
திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மூதாட்டி உயிரிழந்தார். அவருக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் இறந்ததாக அவரது உறவினர்கள், போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம்,
நாகை மாவட்டம் நாகூர் அருகே கொட்டாரக்குடியை சேர்ந்தவர் தவமணி(வயது 60). இவர், நாகையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 13-ந் தேதி திருமண மண்டபத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது வழுக்கி விழுந்தார்.
இதனால் அவருக்கு கால் மற்றும் முதுகு ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் தவமணியை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர்.
இதனை தொடர்ந்து கடந்த 22-ந் தேதி தவமணிக்கு அறுவை சிகிச்சை செய்ய டாக்டர் குழுவினர் மயக்க ஊசி செலுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது அவர் சிறிது நேரத்தில் உயிரிழந்ததாக தெரிகிறது.
இதையடுத்து டாக்டர்கள் தவறான சிகிச்சை அளித்ததால்தான் தவமணி இறந்ததாக கூறி அவரது உறவினர்கள் நாகை டவுன் போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.