இடைதரகர்களிடம் நெல்கொள்முதல் செய்தால் கடும் நடவடிக்கை-அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை

இடைதரகர்களிடம் இருந்து நெல்கொள்முதல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி எச்சரித்துள்ளார்.

Update: 2021-09-24 21:18 GMT
மதுரை
விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். இடைதரகர்களிடம் இருந்து நெல்கொள்முதல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி எச்சரித்துள்ளார்.
திறப்பு விழா
கூட்டுறவுத்துறையின் சார்பில் மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரும்பனுர் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலைய திறப்பு விழா நேற்று நடந்தது. கலெக்டர் அனிஷ்சேகர் தலைமை தாங்கினார். அமைச்சர் மூர்த்தி நெல் கொள்முதல் மையத்தை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:&
முதல்&அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் கிராம மக்களை நேரடியாக சென்றடைய வேண்டும் என்பதில் மிக கவனமாக இருக்கிறார். ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த 4 மாதங்களில் கடும் நிதி நெருக்கடியையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் பயன்பெறுகின்ற வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நெல் கொள்முதல் நிலைய அலுவலர்கள் விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்வதில் கவனமாக செயல்படவேண்டும். இடைத்தரகர்களிடம் இருந்து நெல் கொள்முதல் செய்தால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.. நெல் கொள்முதலை பொறுத்த வரையில் கிராம நிர்வாக அலுவலர்களின் மூலமாக விவசாயிகள் வழங்கும் சிட்டா மற்றும் அடங்கலை ஆய்வு செய்து அடையாள அட்டை வழங்கப்படும்.
ரூ.64 லட்சம் அபராதம்
உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.6 கோடி மதிப்பிலான சோலார் பேனல்களை ஏற்றி வந்த லாரிக்கு ரூ.64 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 103 ஜவுளிக்கடைகளில் தொடர்ந்து வணிகவரித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். ஆய்வுகள் முடிவடைந்த பின்பு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். வணிகவரித்துறை சோதனையின் போது உரிய ஆவணங்கள் இல்லாமல் இரும்பு கம்பிகள் ஏற்றி வந்த லாரிக்கு ரூ.15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 
இதுபோன்று வரி ஏய்ப்பு செய்பவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். 10 வருடங்களுக்கு மேலாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யாத சங்கங்களின் உரிமத்தை ரத்து செய்ய வணிகவரித்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அபராதம் செலுத்திய பின்பு உரிமத்தை புதுப்பிக்கவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. மதுரை வண்டியூர் கண்மாயில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பூங்கா அமைக்கப்படும். மதுரை மாவட்டத்தில் போக்குவரத்து இடையூறை தவிர்க்க பல்வேறு இடங்களில் பாலங்கள் கட்டப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பயிர்க்கடன்
முன்னதாக விழாவில் 31 பேருக்கு ரூ.12.24 லட்சம் மதிப்பீட்டில் பயிர்க்கடன் ஆணைகளையும், கருணை அடிப்படையில் 3 நபர்களுக்கு நியாயவிலைக் கடைகளில் விற்பனையாளர் பணி நியமன ஆணைகளையும், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.9 லட்சம் கடன் தொகையையும் அமைச்சர் மூர்த்தி வழங்கினார். அதனைத்தொடர்ந்து கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு, கர்ப்பணிகளுக்கு 5 வகையான ஊட்டச்சத்துக்கள் அடங்கிய பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சிகளில் எம்.எல்.ஏ.க்கள் பூமிநாதன், வெங்கடேசன், மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் குருமூர்த்தி, துணைப்பதிவாளர் ராஜேந்திரன், நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் சுகுமார், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் விவேகானந்தன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் ஹெலன் ரோஸ், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் ஜீவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்