பெண் தலைதுண்டித்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் திருச்சி கோர்ட்டில் சரண்

பசுபதிபாண்டியன் கொலைக்கு பழிக்குப்பழியாக திண்டுக்கல்லில் பெண் தலைதுண்டித்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் திருச்சி கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

Update: 2021-09-24 19:40 GMT
திருச்சி, செப்.25&
பசுபதிபாண்டியன் கொலைக்கு பழிக்குப்பழியாக திண்டுக்கல்லில் பெண் தலைதுண்டித்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் திருச்சி கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
பெண் தலை துண்டித்து கொலை
திண்டுக்கல் அருகே உள்ள நந்தவனப்பட்டி வள்ளுவர்காலனியை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மனைவி நிர்மலா (வயது 60) . சீலப்பாடி ஊராட்சி மன்ற முன்னாள் வார்டு உறுப்பினரான இவர், 100 நாள் வேலை திட்ட பணி மேற்பார்வையாளராக இருந்து வந்தார். இவர் கடந்த 22&ந் தேதி காலை செட்டிநாயக்கன்பட்டி இ.பி.காலனி பகுதியில் கால்வாய் தூர்வாரும் வேலை தொடர்பாக 100 நாள் வேலைக்கு வந்த பெண்கள் சிலரிடம் பேசி கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் 2 மோட்டார் சைக்கிள்களில் 5 பேர் கொண்ட கும்பல் வந்தனர். அவர்களில் 2 பேர் நிர்மலாவை சூழ்ந்து கொண்டு சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். மேலும், ஆத்திரம் தீராத அந்த கும்பல் நிர்மலாவின் தலையை துண்டித்து எடுத்தனர். பின்னர் அவரது தலையோடு அந்த கும்பல் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று நந்தவனப்பட்டியில் உள்ள பசுபதிபாண்டியன் வீட்டின் முன்பு தலையை போட்டுவிட்டு தப்பி சென்றனர்.
திருச்சி கோர்ட்டில் 5 பேர் சரண்
 இந்த சம்பவம் குறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். முதல்கட்ட விசாரணையில் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவன தலைவர் பசுபதிபாண்டியன் கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் நிர்மலாவை தீர்த்து கட்டியது தெரியவந்தது. கடந்த 2012&ம் ஆண்டு பசுபதிபாண்டியன் நந்தவனப்பட்டியில் உள்ள அவரது வீட்டின் முன்பு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 18 பேர் மீது தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு இருந்தது. இதில் நிர்மலா 5&வது நபராக சேர்க்கப்பட்டு இருந்தார் என்பதும், பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் வழக்கு விசாரணைக்கு அவ்வப்போது ஆஜராகி வந்ததும் தெரியவந்தது.
இந்தநிலையில் நிர்மலா படுகொலை வழக்கு தொடர்பாக திண்டுக்கல் பிலாத்து வேடசந்தூரை சேர்ந்த ரமேஷ்குமார் (33), திண்டுக்கல் செம்பட்டி சீவல்சரகு பகுதியை சேர்ந்த சங்கிலிகருப்பன் (28), தமிழ்செல்வன் (22), அலெக்ஸ்பாண்டி (18), திண்டுக்கல் அம்புலிப்பட்டி பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த முத்துமணி (23) ஆகிய 5 பேர் வக்கீல் பொன்.முருகேசன் மூலமாக திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 4&ல் சரண் அடைந்தனர். அவர்களை 28&ந் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க மாஜிஸ்திரேட்டு குமார் உத்தரவிட்டார். இதையடுத்து 5 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேனில் அழைத்து செல்லப்பட்டு முசிறி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்