சேத்தியாத்தோப்பு அருகே விவசாயி அடித்துக் கொலை
சேத்தியாத்தோப்பு அருகே குடிபோதையில் தாயிடம் தகராறில் ஈடுபட்ட விவசாயியை அடித்துக் கொலை செய்த மகன்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேத்தியாத்தோப்பு,
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கரைமேடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜவேல் (வயது 55), விவசாயி. இவருக்கு அம்பிகா என்ற மனைவியும், ராஜராஜன் (26), ரகுவரன் (24) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். அண்ணன்&தம்பி இருவரும் தங்களுக்கு சொந்தமான விளைநிலத்தில் குட்டை அமைத்து மீன் வளர்த்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த ராஜவேல், மனைவி அம்பிகாவிடம் வீண் தகராறு செய்துள்ளார். இதைபார்த்த அவருடைய மகன்கள் 2 பேரும் ஏன் தினந்தோறும் குடித்து விட்டு வந்து தாயிடம் தகராறில் ஈடுபடுகிறீர்கள்? என தந்தையை தட்டிக்கேட்டனர். இதனால் தந்தை, மகன்களுக்கிடையே வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
உருட்டுக்கட்டையால் அடித்துக்கொலை
அப்போது ஆத்திரமடைந்த ராஜராஜன், ரகுவரன் ஆகியோர் கீழே கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து ராஜவேலை சரமாரியாக தாக்கினர். இதில் ராஜவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ராஜவேல் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் இதுபற்றி சேத்தியாத்தோப்பு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட ராஜவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக ராஜவேல் தங்கை ராஜகுமாரி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, தந்தையை அடித்துக் கொலை செய்த மகன்கள் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குடிபோதையில் தாயிடம் தகராறில் ஈடுபட்ட விவசாயியை பெற்ற மகன்களே அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.