குடிநீர்கேட்டு ஊராட்சி அலுவலகத்தில் கிராமமக்கள் முற்றுகை
குடிநீர்கேட்டு ஊராட்சி அலுவலகத்தில் கிராமமக்கள் முற்றுகையிட்டனர்.
கீழக்கரை,
குடிநீர்கேட்டு ஊராட்சி அலுவலகத்தில் கிராமமக்கள் முற்றுகையிட்டனர்.
குடிநீர் குழாய்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள மாயாகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியான மங்களேசுவரி நகர் மற்றும் புல்லந்தை ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்கள் பெரும்பாலும் கிணற்று தண்ணீரை உபயோகித்து வந்தனர். இந்த நிலையில் மத்திய அரசு கொண்டு வந்த ஜல் ஜீவன் திட்டத்தின்கீழ் வீடுதோறும் குடிநீர் வழங்கும் திட்டம் நிறைவேற்றப்பட்டு அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்னும் சில வீடுகளுக்கு குடிநீர் குழாய் பதிக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது.
குழாய் பதிப்பு முழுமை அடையாததால் இந்த பகுதிக்கு குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குடிநீர் வரவில்லை என்று ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு காலிக்குடங்களுடன் மாயாகுளம் ஊராட்சி மன்றத்தை முற்றுகையிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த திருப்புல்லாணி ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் மேகலா நேரடியாக சென்று அந்தபகுதியை பார்வையிட்டார்.
உறுதி
இதுகுறித்து மாயாகுளம் ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி பாக்கியநாதன் கூறியதாவது:& கடந்த மாதம் மாவட்ட கலெக்டரிடம் புல்லந்தை மற்றும் மங்களேஸ்வரி நகர் பகுதியில் விரைவாக குடிநீர் வழங்குவது குறித்து ஏற்கனவே கோரிக்கை மனு அளிக்கப்பட்டு உள்ளது என்று கூறினார். மேலும் விரைவில் இப்பகுதியில் குடிநீர் வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டதால் அனைத்து மக்களும் கலைந்து சென்றனர்.