தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 47 ரவுடிகள் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 47 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 47 ரவுடிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
47 ரவுடிகள்
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில் நேற்று முன்தினம் இரவு மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன தணிக்கை, விடுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை விடிய, விடிய நடந்தது. அப்போது பல்வேறு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 47 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 42 அரிவாள், வாள் போன்ற கூர்மையான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
இதுதவிர பழைய வழக்குகளில் ஈடுபட்டுள்ளவர்கள் 103 பேர் மீது குற்ற விசாரணை நடைமுறைச் சட்டம் 107, 109 மற்றும் 110 ஆகிய பிரிவுகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 5 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கண்காணிப்பு
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகள் சோதனையிடப்பட்டு உள்ளது, வாகன சோதனையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சோதனையிடப்பட்டு மோட்டார் வாகனச் சட்டத்தை மீறியதாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் உள்ள வங்கிகள், நிதிநிறுவனங்கள், ஏ.டி.எம் மையங்கள், நகைக்கடைகள் உட்பட முக்கிய இடங்களை கண்காணிக்கப்பட்டன. இந்த பணி தொடர்ந்து நடைபெறும் எனவும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.