இரும்புக்கம்பியால் தாக்கி தொழிலாளி கொலை

இரும்புக்கம்பியால் தாக்கி தொழிலாளி கொலை

Update: 2021-09-24 13:36 GMT
ஊட்டி

ஊட்டியில் மதுபோதையில் தகராறு செய்த தொழிலாளியை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்த அவரது மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது

கணவரை பிரிந்தார்

நீலகிரி மாவட்டம் ஊட்டி கிரீன்பீல்டு பகுதியை சேர்ந்தவர் ஜான் பால் (வயது 45), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ரோஸ்லின் மேரி (33). இவர்களுக்கு குழந்தை இல்லை. 

கணவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவர் மதுகுடித்து விட்டு அடிக்கடி மனைவியுடன்  தகராறு செய்து வந்தார்.

இதனால் ரோஸ்லின்மேரி கணவரை பிரிந்து புதுமந்து சாலையில் உள்ள தனது தாய் லெசி (53) வீட்டில் கடந்த 2 மாதமாக தங்கி இருந்தார். 

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜான் பால் தன் மனைவியை வீட்டுக்கு அழைப்பதற்காக மாமியார் வீட்டுக்கு சென்றார்.

இரும்புக்கம்பியால் தாக்குதல்

குடிபோதையில் இருந்த அவர், தனது மனைவியிடம் குடும்பம் நடத்த வீட்டுக்கு வரும்படி அழைத்தார். இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஜான் பால், ரோஸ்லின் மேரியை தாக்க முயன்றார். 

உடனே ரோஸ்லின் மேரியின் அக்கா குளோரா (39), அவருடைய கணவர் சுரேஷ், லெசி ஆகிய 3 பேரும் சேர்ந்து தடுத்து உள்ளனர். இதையடுத்து ரோஸ்லின்மேரி மற்றும் 3 பேரும் சேர்ந்து ஜான்பாலை இரும்புக்கம்பியால் தாக்கி உள்ளனர். 

இதில் படுகாயம் அடைந்த ஜான் பாலை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி ஜான்பால் பரிதாபமாக இறந்தார். 

மனைவி உள்பட 3 பேர் கைது

இதுகுறித்த புகாரின் பேரில் ஊட்டி நகர மத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். 

இதில், குடிபோதையில் தகராறு செய்ததால் மனைவி உள்பட 4 பேர் சேர்ந்து இரும்புக்கம்பியால் தாக்கி ஜான்பாலை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து மனைவி ரோஸ்லின் மேரி, குளோரா, சுரேஷ், லெசி ஆகிய 4 பேர் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். 
இதில் ரோஸ்லின் மேரி, குளோரா, லெசி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். சுரேஷ் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். 

அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்