கந்து வட்டி கொடுமையால் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
கந்துவட்டி கொடுமையால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹாசன்: கந்துவட்டி கொடுமையால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொழிலாளி
ஹாசன் மாவட்டம் அரிசிகெரே டவுன் 3-வது கிராஸ் ஹாசன் சாலையில் வசித்து வந்தவர் சங்கர் (வயது 48). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி இந்திரா. இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக அவருக்கு சரியாக வேலை கிடைக்கவில்லை. இதனால் குடும்பம் நடத்த மிகவும் சிரமப்பட்டார். இந்த நிலையில் சங்கர், அந்தப்பகுதியை சேர்ந்த சிலரிடம் கடன் வாங்கி குடும்பத்தை நடத்தி வந்தார். மேலும் இந்த கடனுக்காக மாதந்தோறும் வட்டி கட்டி வந்துள்ளார்.
இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் கூடுதல் வட்டி கேட்டு சங்கரை தொந்தரவு செய்து வந்துள்ளனர். இதனால் கூடுதல் வட்டி செலுத்த முடியாமலும், வாங்கிய கடனை திரும்ப கொடுக்க முடியாமலும், சரியான வேலை இல்லாமலும் சங்கர் அவதிப்பட்டு வந்தார்.
தற்கொலை
இந்த நிலையில் கந்துவட்டி கொடுமையால் அவதிப்பட்டு வந்த சங்கர், நேற்று வீட்டில் வைத்து விஷம் குடித்தார். மயங்கிய நிலையில் இருந்தவரை மனைவி இந்திரா மற்றும் அக்கம்பக்கத்தினர் மீட்டு அரிசிகெரே அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சங்கரின் மனைவி இந்திரா, அரிசிகெரே போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாரில், ஊரடங்கால் வேலை இல்லாமல் அவதிப்பட்டு வந்த எனது கணவர் சங்கர், கிராமத்தை சேர்ந்த கந்துவட்டிகாரர்களிடம் கடன் வாங்கியிருந்தார். அவர்கள் அதிக வட்டி வசூலித்ததுடன் எனது கணவரை தொந்தரவு செய்து வந்தனர். கந்துவட்டிக்காரர்களின் கொடுமையால் தான் எனது கணவர் சங்கர் தற்கொலை செய்துகொண்டார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
4 பேர் மீது வழக்குப்பதிவு
மேலும் சங்கர் எழுதிய கடிதத்தையும் அவருடைய மனைவி போலீசாரிடம் கொடுத்தார். அந்த கடிதத்தில், வாங்கிய கடனை விட அதிகமாகவே வட்டி கட்டிவிட்டேன். ஆனாலும் கடன் கொடுத்தவர்கள் கூடுதல் வட்டி கேட்டு தொந்தரவு செய்கிறார்கள். இதனால் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்கிறேன் என்று எழுதியிருந்தார்.