கொடைக்கானலில் மழை
கொடைக்கானல் பகுதியில் மழை பெய்தது. இதனால் பகலில் கடும் குளிர் நிலவியது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் பகுதியில் நேற்று பகல் நேரத்தில் சூரியனை சுற்றி ஒளி வட்டம் காணப்பட்டது. இதனை ஏராளமான சுற்றுலா பயணிகளும் புகைப்படம் எடுத்தனர். சிறிது நேரத்தில் ஒளி வட்டம் மறைந்தது. இதைத்தொடர்ந்து நேற்று மதியம் 2 மணி அளவில் கொடைக்கானல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சுமார் அரைமணி நேரம் நீடித்தது.
சுற்றுலா பயணிகள் மழையில் நனைந்தபடியே சுற்றுலா இடங்களை கண்டு களித்தனர். மேலும் அவர்கள் படகு சவாரி, சைக்கிள் சவாரி மற்றும் குதிரை சவாரி போன்றவற்றிலும் உற்சாகமாக ஈடுபட்டனர். மழையின் காரணமாக பகல் நேரத்திலேயே கடும் குளிர் நிலவியது.
இதேபோல் கொடைரோடு, அம்மையநாயக்கனூர், பள்ளப்பட்டி, மாலையகவுண்டன்பட்டி, அம்மாபட்டி, ராஜதானிக்கோட்டை, நாகையகவுண்டன்பட்டி ஆகிய பகுதிகளில் நேற்று மாலை 4 மணி முதல் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.