தற்கொலை மிரட்டல் விடுத்த பெற்றோரிடம் சாணிப்பவுடர் கலந்த நீரை பிடுங்கி குடித்த மகன் சாவு குடிப்பழக்கத்தால் விபரீத முடிவு

தற்கொலை மிரட்டல் விடுத்த பெற்றோரிடம் இருந்து சாணிப்பவுடர் கலந்த நீரை பிடுங்கி குடித்த மகன் இறந்தார். குடிப்பழக்கத்தால் இந்த விபரீத சம்பவம் நடந்துள்ளது.

Update: 2021-09-23 20:43 GMT
சத்தியமங்கலம்
தற்கொலை மிரட்டல் விடுத்த பெற்றோரிடம் இருந்து சாணிப்பவுடர் கலந்த நீரை பிடுங்கி குடித்த மகன் இறந்தார். குடிப்பழக்கத்தால் இந்த விபரீத சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தொழிலாளி
சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை காமாட்சி அம்மன் கோவில் சந்து பகுதியை சேர்ந்தவர் காளப்பன் (வயது 60). இவருடைய மனைவி லட்சுமி (55). விருந்து நிகழ்ச்சிகளுக்கு 2 பேரும் சமையல் வேலை செய்து வருகிறார்கள். இவர்களுடைய மகன் அருண்குமார் (32). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு மில்லில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கொரோனா காரணமாக அருண்குமார் வேலைக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் தனது நண்பர்களுடன் குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்ததுடன், போதையில் பலருடன் சண்டையும் போட்டு வந்து உள்ளார். இதனால் உறவினர்கள் மத்தியில் காளப்பனுக்கு அவமானம் ஏற்பட்டதாக தெரிகிறது. 
தற்கொலை மிரட்டல்
இந்த நிலையில் நேற்று முன்தினம் தன்னுடைய மகனை மிரட்டுவதற்காக காளப்பனும், அவருடைய மனைவி லட்சுமியும் ஒரு டம்ளரில் சாணிப்பவுடர் கலந்த நீரை கலக்கி வைத்துக்கொண்டனர். பின்னர் அவர்கள் 2 பேரும் அருண்குமாரிடம், உன் குடியால் நாங்கள் 2 பேரும் அவமானப்பட்டது போதும். எனவே நாங்கள் இந்த சாணிப்பவுடர் கலந்த நீரை குடித்து செத்து விடுகிறோம் என்றபடி தற்கொலை மிரட்டல் விடுத்தனர். 
இதைக்கண்டதும் அதிர்ச்சி அடைந்த அருண்குமார், என்னால் தானே உங்களுக்கு அவமானம். நானே குடித்துவிடுகிறேன் என்றதுடன், அவர்கள் கையில் இருந்த சாணிப்பவுடர் கலந்த நீரை எதிர்பாராத வகையில் சட்டென்று பிடுங்கி மடமடவென குடித்து விட்டார். 
சாவு
உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று அருண்குமாரை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர்  இறந்தார். 
இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்