2 வாலிபர்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை
காரில் கஞ்சா கடத்திய வழக்கில் 2 வாலிபர்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.
பெரம்பலூர்:
சிறையில் அடைப்பு
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்வதற்காக ஆந்திர மாநிலம் காக்கி நாடாவில் இருந்து மதுரைக்கு கடந்த 2019&ம் ஆண்டு ஜூலை மாதம் 13&ந் தேதி கஞ்சா கடத்தி வந்த காரை, பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே போலீசார் சோதனைக்காக வழிமறித்தனர். ஆனால் அந்த கார் நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்றது. இதனை கண்ட போலீசார் தங்களது வாகனத்தில், அந்த காரை சினிமா பாணியில் பின்தொடர்ந்து துரத்திச்சென்று பிடித்தனர்.
அப்போது காரை ஓட்டிய நபர் போலீசாரை தாக்குவதற்காக காரில் இருந்து ஏதோ துப்பாக்கியை எடுப்பது போல் ஆயுதத்தை எடுக்க முயன்றார். இதனால் சுதாரித்து கொண்ட போலீசாரில் ஒருவர் தனது துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டார். இதையடுத்து காரை ஓட்டியவரும், காரில் இருந்த மற்றொருவரும் காரின் கதவுகளை திறந்து தப்ப முயன்றனர். அப்போது போலீசார் துப்பாக்கி முனையில் அவர்கள் 2 பேரையும் பிடித்தனர். மேலும் போலீசார் அந்த காரை சோதனை செய்து, அதில் இருந்த 180 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரில் கஞ்சா கடத்தி வந்த மதுரை காமராஜபுரத்தை சேர்ந்த முத்துவின் மகன் முனியசாமி என்ற படை முனியசாமி(வயது 31), ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள எருமைகுளம் பகுதியை சேர்ந்த சிறை மீட்டான் மகன் வழிவிடும் முருகன் (21) ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
10 ஆண்டுகள் சிறை
இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட அத்தியாவசிய பொருட்கள் சட்டம் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று முன்தினம் இந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பளித்தார். அவர் தனது தீர்ப்பில், அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை காரில் கடத்தி வந்த முனியசாமி, வழிவிடும்முருகன் ஆகியோருக்கு 3 பிரிவுகளில் தலா 27 ஆண்டுகள் சிறை தண்டனையும், அதனை ஏக காலத்தில் (தலா 10 ஆண்டுகள்) அனுபவிக்க வேண்டும் என்றும், ரூ.2 லட்சத்து 5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து முனியசாமியையும், வழிவிடும்முருகனையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச்சென்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.