ஆதிகேசவ பெருமாள் கோவில் கருவறை முன்பு சூரியஒளி விழும் அதிசயம்

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கருவறை முன்பு சூரியஒளி கதிர்கள் விழும் அதிசய நிகழ்வு நேற்று நடந்தது. இதனை திரளான பக்தர்கள் கண்டுகளித்தனர்.

Update: 2021-09-23 19:13 GMT
திருவட்டார்:
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கருவறை முன்பு சூரியஒளி கதிர்கள் விழும் அதிசய நிகழ்வு நேற்று நடந்தது. இதனை திரளான பக்தர்கள் கண்டுகளித்தனர்.
பெருமாள் கோவில்
108 வைணவ தலங்களில் ஒன்றாகவும், நம்மாழ்வாரால் பாடல் இயற்றப்பெற்றதுமான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு பெருமாள் அனந்த சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாத தொடக்கத்தில் மாலை நேரம் சூரியனின் மயக்கும் பொன்னிற கதிர்கள் அனந்த சயனத்தில் பள்ளி கொண்டு அருள்பாலிக்கும் பெருமாளின் உடலில் விழும் வகையில் கோவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  
அதாவது, புரட்டாசி மாதம் 3-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை மாலையில் மறையும் சூரிய ஒளி கதிர்கள் கோவில் கருவறை வரை பாய்ந்து செல்லும் அதிசயம் நடைபெறும்.
சூரியஒளி கதிர்கள் விழுந்தது
இப்போது கோவில் புனரமைப்பு வேலைகள் நடைபெற்று வருவதால் கருவறையின் முன்புற உதய மார்த்தாண்ட மண்டபத்தில் உள்ள வாசல் கதவு திறக்கப்படுவது இல்லை. இதனால் கதவில் மாலையில் சூரிய ஒளி விழுந்தது. அதாவது நேற்று மாலை மறைய தொடங்கிய சூரியனின் மஞ்சள் நிறக்கதிர்கள் கண்களை கூசச்செய்யும் விதத்தில் பாய்ந்து கருவறையின் முன்புறம் உதயமார்த்தாண்ட மண்டப பகுதியில் விழுந்தது. இதை பார்த்து பக்தர்கள் பரவசமடைந்தனர். இந்த அபூர்வ காட்சியை இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் (சனிக்கிழமை) மாலை 6 மணி அளவில் காணலாம்.

மேலும் செய்திகள்