பாலாற்று நீரை ஏரிகளுக்கு திருப்பி விடும் பணியை கலெக்டர் ஆய்வு
பாலாற்று நீரை ஏரிகளுக்கு திருப்பி விடும் பணியை கலெக்டர் ஆய்வு
வேலூர்
ஆந்திர மாநில எல்லைப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக தமிழக எல்லைப்பகுதியான புல்லூர் அணைக்கட்டு மற்றும் வாணியம்பாடி சுற்றுப்புற பகுதிகளில் பெய்த மழையால் மலட்டாறுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. அகரம் ஆற்றங்கரையோர பகுதிகளில் பெய்த மழைநீர் உள்ளிட்டவை இணைந்து வேலூர் பாலாற்றில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் செல்கிறது. பாலாற்றில் சென்று வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை கால்வாய்கள் வழியாக வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுகளில் உள்ள ஏரிகளுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாலாற்று தண்ணீரை ஏரிகளுக்கு திருப்பி விடும் பணியை வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். செதுவாலை, விரிஞ்சிபுரம், ஒக்கணாபுரம், இறையங்காடு, மேல்காவனூர், கவசம்பட்டி, அப்துல்லாபுரம், சதுப்பேரி, மேல்மொணவூர், பெரியஏரி, கடப்பேரி ஆகிய ஏரிகளுக்கு தண்ணீர் செல்வதை கலெக்டர் பார்வையிட்டார். நீர்வரத்து கால்வாயில் உள்ள மரங்கள், செடி, கொடிகள், மண்மேடுகளை அப்புறப்படுத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்பட பலர் உடனிருந்தனர்.