குழாய் உடைப்பு சரிசெய்யப்பட்டது
புதுக்கடை-பரசேரி சாலையில் கருக்குப்பனை சந்திப்பில் சுனாமி கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் சாலையில் வீணானது. இதுகுறித்த செய்தி ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் நேற்று வெளியிடப்பட்டது. செய்தி வெளியிட்ட அன்றே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைத்தனர். சம்பந்தப்பட்ட துறைக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றியை தெரிவித்தனர்.
சாலையை சீரமைக்க வேண்டும்
ராணித்தோட்டம் தடி டிப்போ ரோடு முடிவடையும் சானல்கரை சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்து காணப்படுகிறது. மேலும், சாலையோரத்தில் சிலர் குப்பைகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பிரகாஷ், ராணித்தோட்டம்.
தொற்று நோய் பரவும் அபாயம்
நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 19-வது வார்டு வேதநகர் வழியாக வரும் கோட்டார் கால்வாயில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆன்றோ டெகோசிங் ராஜன், வேதநகர்.
தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்
ஆரல்வாய்மொழி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே பொய்கை ஓடை உள்ளது. இதன் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் மாணவ-மாணவிகள், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, மாணவ-மாணவிகள், வாகன ஓட்டிகள் நலன் கருதி சேதமடைந்த தடுப்புச்சுவரை மீண்டும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தமிழரசு, ஆரல்வாய்மொழி.
குப்பைகள் அகற்றப்படுமா?
ஆற்றூர் பேரூராட்சி அலுவலகம் முன் பகுதியில் பத்மநாபபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியில் இருந்து ஆற்றூர் சுற்றுவட்டாரம் மற்றும் பத்மநாபபுரம் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆற்றூர் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை அதற்கான இடத்தில் கொட்டாமல் மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் அடிப்பகுதியில் கொட்டி வருகின்றனர். இதனால், அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், பல்வேறு தேவைகளுக்காக பேரூராட்சி அலுவலகம் வரும் மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும்.
-அஸ்வின் ஹென்றி, ஆற்றூர்.
கழிவுநீர் ஓடை சீரமைக்கப்படுமா?
நாகர்கோவில் நகரின் முக்கிய சாலைகளில் ஒன்று பாலமோர் சாலை ஆகும். இந்த சாலையில் ஸ்டேடியம் நீச்சல் குளம் எதிரே உள்ள கழிவுநீர் ஓடை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. எனவே, கழிவுநீர் ஓடையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சீரமைப்பார்களா?.
-ஆசிம், நாகர்கோவில்.