லாரியில் கடத்த முயன்ற 14 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
தேனியில் இருந்து கேரளாவுக்கு, லாரியில் கடத்த முயன்ற 14 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
உத்தமபாளையம்:
ரேஷன் அரிசி கடத்தல்
தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, கேரள மாநிலத்துக்கு லாரிகளில் ரேஷன் அரிசி கடத்தி செல்லப்படுவதாக தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரனுக்கு புகார் வந்தது.
இதனையடுத்து அரிசி கடத்தலை தடுத்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
அதன்பேரில் தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் வழிகளான குமுளி மலைப்பாதை, கம்பம் மெட்டு, தேவாரம் சாக்குலூத்து மெட்டு, போடி மெட்டு ஆகிய பகுதிகளில் பறக்கும் படையினர், வருவாய்த்துறையினர் மற்றும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலையில் கோம்பை வழியாக கேரள மாநிலத்துக்கு லாரியில் ரேஷன் அரிசி கடத்தி செல்ல இருப்பதாக உத்தமபாளையம் பறக்கும் படை துணை தாசில்தார் கண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அவரது தலைமையில் வருவாய்த்துறையினர் கம்பம் மெட்டு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
14 டன் பறிமுதல்
அப்போது, அந்த வழியாக ஒரு லாரி மின்னல் வேகத்தில் வந்தது. அதிகாரிகளை பார்த்ததும், சாலையோரத்தில் லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் மற்றும் அவருடன் வந்தவர்கள் தப்பி ஓடி விட்டனர். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அங்கு சென்று லாரியை சோதனை செய்தனர்.
அப்போது லாரியில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி இருப்பதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். லாரியில் மொத்தம் 14 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் லாரியை பறிமுதல் செய்து, உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் வருவாய்த்துறையினர் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் உமாதேவி வழக்குப்பதிவு செய்து, லாரியில் ரேஷன் அரிசி கடத்திய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். இதேபோல் கடந்த சிலதினங்களுக்கு முன்பு லாரியில் கடத்த முயன்ற 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.