தினத்தந்தி செய்தி எதிரொலி:
பழுதான சாலையை சரிசெய்தாச்சு...
கோவை சுக்ரவார்பேட்டை பகுதியில் சாலை குண்டும் குழியுமாக இருந்தது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்து வந்தனர். வாகன ஓட்டிகளின் அவதி குறித்து தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியிடப்பட்டது.
அதன்பயனாக அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து பழுதான சாலையை சரிசெய்து உள்ளனர். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பாராட்டுக்கள்.
ஆனந்தன், கோவை.
இருசக்கர வாகனம் ஓட்டும் சிறுவர்கள்
நெகமம், கிணத்துக்கடவு பகுதிகளில் 18 வயது பூர்த்தியடையாத சிறுவர்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டி செல்கின்றனர். அவர்கள் ஹெல்மெட் அணியாமல் செல்வதோடு ஒரே இருசக்கர வாகனத்தில் 3 அல்லது அதற்கும் மேலான எண்ணிக்கையில் பயணிக்கின்றனர்.
இதை கண்டிக்க வேண்டிய பெற்றோர் கண்டு கொள்ளாமல் உள்ளனர். இதனால் விபத்தில் சிக்கி உயிரிழப்பு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கந்தன், நெகமம்.
பகலில் ஒளிரும் விளக்குகள்
கிணத்துக்கடவு அருகே தேவணாம்பாளையத்தில் இருந்து கப்பளாங்கரை செல்லும் சாலையில் 10-க்கும் மேற்பட்ட மின் கம்பங்களில் தெருவிளக்கு வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. அவை இரவு நேரத்தில் மட்டும் எரிய வேண்டும்.
ஆனால் கடந்த சில நாட்களாக பகல் நேரத்திலும் எரிந்து கொண்டு இருக்கின்றன. இதனால் அரசு வீண் செலவு ஏற்படும். எனவே அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சந்திரன், தேவணாம்பாளையம்.
பாதுகாப்பற்ற பயணம்
இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர் கட்டாயம் தலைகவசம் அணிய வேண்டும் என நீலகிரி மாவட்ட போலீசார் உத்தரவிட்டு உள்ளனர்.
ஆனால் அதை மீறி கோத்தகிரி பகுதியில் பெரும்பாலான இளைஞர்கள் மற்றும் பெண்கள் தலைகவசம் அணியாமல் பாதுகாப்பின்றி பயணம் செய்கின்றனர். எனவே அவர்கள் மீது போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜேஷ்குமார், கோத்தகிரி.
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்
சுல்தான்பேட்டை வாரப்பட்டியில் ஏராளமான வீடுகள் உள்ளன. இங்கு பஸ்நிறுத்தம் அருகே மின்கம்பிகள் மிக தாழ்வாக செல்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்களில் மின்சாரம் தாக்கக்கூடிய அபாய நிலை உள்ளது.
எனவே எந்த நேரத்திலும் விபத்துகள் ஏற்படும் நிலை நீடித்து வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செந்தில்குமார், வாரப்பட்டி.
மதுபானங்களுக்கு கூடுதல் விலை
பொள்ளாச்சி மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் இருக்கும் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. இது குறித்து கேட்டால் கடை ஊழியர்கள் முறையான பதிலை சொல்வது இல்லை.
குறிப்பாக ஒரு பாட்டிலுக்கு ரூ.20 வரை அதிகம் வைத்து விற்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மஜித், சூளேஸ்வரன்பட்டி.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
கோவை கணபதியில் இருந்து ரத்தினபுரிக்கு செல்லும் சாலையில் மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் கழிவுநீர் சரிவர சுத்தம் செய்யப்படாததால் அங்கு அதிகளவில் தேங்கி நிற்கிறது.
சில வீடுகளுக்குள்ளும் சென்று உள்ளது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து சுத்தம் செய்ய வேண்டும்.
பார்த்திபன், நல்லாம்பாளையம்.
கழிப்பிட வசதி வேண்டும்
கருமத்தம்பட்டி எலச்சிபாளையம் பகுதியில் குப்பைகள் சரிவர சுத்தம் செய்யப்படுவது இல்லை. இதனால் அங்கு குப்பைகள் மலைபோன்று குவிந்து உள்ளன. மேலும் இந்த பகுதியில் பொது கழிப்பிட வசதி இல்லை.
எனவே பொதுமக்கள் சாலையோரத்தை பயன்படுத்தி வருவதால், தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்றுவதுடன், கழிப்பிட வசதி செய்து கொடுக்க வேண்டும்.
சந்தோஷ்குமார், எலச்சிபாளையம்.
தார் சாலை அமைக்கப்படுமா?
கோவை உடையம்பாளையம் லட்சுமி கார்டனில் மண்சாலை உள்ளது. இதனால் இந்த சாலை குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
இதன் காரணமாக இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரிதும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, தார்சாலை அமைக்க வேண்டும்.
தாரிகா, உடையம்பாளையம்.
சாக்கடை கால்வாய் இல்லை
கோவை கணபதி போலீஸ் குடியிருப்பில் கழிவுநீர் செல்ல சாக்கடை கால்வாய் வசதி செய்யப்படவில்லை. இதன் காரணமாக வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் அங்கேயே தேங்கி நிற்கிறது.
இதனால் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. எனவே இந்தப்பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும்.
சுந்தரம், போலீஸ் குடியிருப்பு.
குண்டும்-குழியுமான சாலை
கோவை உருமாண்டம்பாளையம் காந்தி நகரில் தார் சாலை உள்ளது. இந்த வழியாக கனரக வாகனங்கள் அடிக்கடி சென்று வருவதால், பழுதடைந்து குண்டும்-குழியுமாக மாறிவிட்டது.
இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விக்னேஷ்வரன், உருமாண்டம்பாளையம்.
வேகத்தடை வேண்டும்
சரவணம்பட்டியில் இருந்து துடியலூர் செல்லும் சாலையில் ரைஸ்மில் அருகே குமாரசாமி அவன்யூ என்ற இடம் உள்ளது. இதன் அருகே சாலையில் வளைவும் இருக்கிறது. இதன் அருகே பொதுமக்கள் பலர் சாலையை கடக்கிறார்கள்.
இங்கு வளைவு இருப்பதால் வாகனங்கள் வருவது தெரிவதில்லை. இதனால் வாகனங்கள் வேகமாக வருவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த வளைவு அருகே வேகத்தடை அமைக்க வேண்டும்.
தேவராஜன், வெள்ளக்கிணர்.