தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி

Update: 2021-09-23 16:46 GMT
`தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புகார் பெட்டி செய்தி எதிரொலி 

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி -தூத்துக்குடி மெயின்ரோட்டில் நல்லூர் விலக்கில் சாலையின் நடுவில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் வலதுபுற சாலையில் வேகத்தடை அமைக்கப்படாமல் இருந்தது. இதுபற்றி கடந்த 11-ந்தேதி `தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் வாசகர் லாரன்ஸ் அனுப்பிய பதிவு `வேகத்தடை வேண்டும்' என்ற தலைப்பில் செய்தியாக வெளியானது. இதன் எதிரொலியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வேகத்தடை அமைத்து உள்ளனர். கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த `தினத்தந்தி'க்கும், அதிகாரிகளுக்கும் நன்றியையும், பாராட்டுகளையும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊருக்குள் பஸ் வர வேண்டும்

நெல்லை மாவட்டம் அம்பை தாலுகாவில் உள்ள தெற்கு பாப்பான்குளத்திற்கு தினமும் காலை 8 மணிக்கு `1 சி' என்ற அரசு டவுன் பஸ் வந்து சென்றது. மணிமுத்தாறில் இருந்து ஆழ்வார்குறிச்சிக்கு சென்ற அந்த பஸ் காலையில் வந்து சென்றதால் மாணவ, மாணவிகள் அதில் பயணம் செய்து பயனடைந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அந்த பஸ் ஊருக்குள் வருவதில்லை. இதனால் மாணவ, மாணவிகள் உள்பட பொதுமக்கள் கடும் சிரமப்படுகிறார்கள். எனவே, அந்த பஸ்சை மீண்டும் ஊருக்குள் வந்து செல்லுமாறு இயக்க வேண்டுகிறேன்.
-துர்கா, தெற்கு பாப்பான்குளம்.

வழிகாட்டி பலகை அமைக்கப்படுமா?

ராதாபுரம் தாலுகா விஜயாபதி பஞ்சாயத்து கொத்தங்குளம் பஸ் நிறுத்தம் அருகில் 4 ரோடுகள் சந்திக்கின்றன. இங்கு வரும் வெளியூர் பயணிகள் எந்த ரோடு, எந்த ஊருக்கு செல்கிறது என்பது தெரியாமல் குழம்பும் நிலை ஏற்படுகிறது. எனவே, குழப்பத்தை தவிர்க்க அந்த இடத்தில் வழிகாட்டி பலகை அமைக்குமாறு வேண்டுகிறேன். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.

பழுதடைந்த சாலை

சுத்தமல்லி பஸ் நிறுத்தம் முதல் பேட்டை கல்லூரி வரை மற்றும் டவுன் வழுக்கோடை பஸ் நிறுத்தம் முதல் டவுன் ஆர்ச் வரை சாலைகள் மிக மோசமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே, தரமான சாலைகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
-ராமசுப்பிரமணியன், கூனியூர்.

குப்பையால் சுகாதார சீர்கேடு

தென்காசி 33-வது வார்டு கீழப்புலியூர் சுந்தரபாண்டியபுரம் ரோடு இசக்கியம்மன் கோவில் அருகில் சாலையோரத்தில் குப்பைகளை கொட்டி விடுகிறார்கள். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும், நோய் பரவும் அபாயம் உள்ளது. இதன் அருகில் மின்சார டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து சில நேரங்களில் தீப்பொறி அந்த குப்பையில் விழும்போது தீப்பிடித்துக்கொள்கிறது. எனவே, அந்த பகுதியில் குப்பை கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தம்பிரான், கீழப்புலியூர்.

டிரான்ஸ்பார்மர் செயல்பாட்டுக்கு வருமா? 

தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகில் கே.நவநீதகிருஷ்ணபுரத்தில் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. அந்த டிரான்ஸ்பார்மர் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. எனவே, அதனை செயல்பாட்டுக்கு கொண்டு வர மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அரிகிருஷ்ணன், கே.நவநீதகிருஷ்ணபுரம்.

மின்கம்பம் சரி செய்யப்பட்டது

ஆத்தூர் 14-வது வார்டில் ஆற்றங்கரை தெருவில் மின்கம்பம் பழுதடைந்து இருந்தது. இதுபற்றி கடந்த 21-ந்தேதி `தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் `பழுதடைந்த மின்கம்பம்' என்ற தலைப்பில் வாசகர் ஜாகீர் உசேன் அனுப்பிய பதிவு செய்தியாக வெளியானது. இதில் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து புதிய மின் கம்பத்தை அமைத்துள்ளனர். கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த `தினத்தந்தி'க்கும், அதிகாரிகளுக்கும் நன்றியையும், பாராட்டுகளையும் அவர் தெரிவித்துள்ளார்.

சாலை வசதி வேண்டும்

தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துக்கு உட்பட்ட குமரன்நகர் 1-வது தெருவில் (வார்டு-9) சாலை வசதி அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தோம். ஆனால், சாலை அமைக்கப்படவில்லை. கடந்த ஆண்டு மழைக்காலத்தில் அந்த தெரு மக்கள் இடுப்பளவு தண்ணீரில் சென்று அவதிப்பட்டோம். எனவே, சாலை வசதி அமைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
-சுதாகர், மாப்பிள்ளையூரணி.

குப்பை அகற்றப்படுமா?

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா நடுவக்குறிச்சி நல்லூர் ஊர் முகப்பில் குப்பை தொட்டி வைக்கப்பட்டது. இதில் குப்பை கொட்டி வருகின்றனர். ஆனால், கடந்த பல நாட்களாக குப்பை அல்லாமல் இருப்பதால் தற்போது துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே, நோய் பரவும் முன் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஆமோஸ், நல்லூர்.


மேலும் செய்திகள்