மலை தேனீக்கள் கொட்டியதில் 8 தொழிலாளர்கள் படுகாயம்
வால்பாறை அருகே மலை தேனீக்கள் கொட்டியதில் 8 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் கூடுகளை கலைக்க கோரிக்கை விடுத்து உள்ளனர்.
வால்பாறை
வால்பாறை அருகே மலை தேனீக்கள் கொட்டியதில் 8 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் கூடுகளை கலைக்க கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மலை தேனீக்கள்
கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை தோட்டங்கள் அதிகளவில் உள்ளன. இதனை சுற்றி அடர்ந்த வனப்பகுதிகள் காணப்படுகின்றன. தேயிலை தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள், அதனருகில் உள்ள குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் வால்பாறை அருகே உள்ள ஒரு தனியார் தேயிலை தோட்டத்தின் 23-வது பிரிவில் நேற்று காலை 9.45 மணியளவில் பச்சை தேயிலை பறிக்கும் பணியில் ஆண், பெண் தொழிலாளர்கள் என 10&க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு எங்கிருந்தோ மலை தேனீக்கள் பறந்து வந்தன.
8 பேர் படுகாயம்
பின்னர் பச்சை தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்களை சுற்றி வளைத்து கொட்ட தொடங்கின. இதை சற்றும் எதிர்பாராத தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மேலும் தங்கள் கையில் இருந்த சாக்கு உள்ளிட்டவற்றை கொண்டு தேனீக்களை விரட்ட முயன்றனர். எனினும் தேனீக்கள் அவர்களை கொட்டின.
அதன்பின்னர் அங்கிருந்து தேனீக்கள் சென்றுவிட்டன. இதில் வசந்தகுமாரி(வயது 57), சரஸ்வதி(49), தனலட்சுமி(71), விஜயா(52), மலர்(53), ஜோதி(58), சதீஷ்(21), பெருமாள்(72) ஆகிய 8 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கூடுகளை கலைக்க வேண்டும்
வால்பாறை பகுதியில் உள்ள பல்வேறு எஸ்டேட்டுகளில் மலை தேனீக்கள் தொல்லை காணப்படுகிறது. எனவே அங்குள்ள மரங்களில் மலை தேனீக்களின் கூடுகள் இருந்தால், அதுகுறித்து உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும், மேலும் அவர்களின் அனுமதி பெற்று மலை தேனீக்களின் கூடுகளை கலைக்க சம்பந்தப்பட்ட எஸ்டேட் நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.