வெண்ணந்தூர் அருகே, ரெயிலில் இருந்து தவறி விழுந்து வருவாய் ஆய்வாளர் அலுவலக உதவியாளர் பலி ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்

வெண்ணந்தூர் அருகே, ரெயிலில் இருந்து தவறி விழுந்து வருவாய் ஆய்வாளர் அலுவலக உதவியாளர் பலி ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்

Update: 2021-09-23 11:50 GMT
வெண்ணந்தூர்:
வெண்ணந்தூர் அருகே ரெயிலில் இருந்து தவறி விழுந்து ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வருவாய் ஆய்வாளர் அலுவலக உதவியாளர் இறந்தார். 
அலுவலக உதவியாளர்
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அடுத்த ஆயிபாளையம் அருகே சேலம்& கரூர் செல்லும் ரெயில் தண்டவாளத்தில் ஆண் ஒருவரின் உடல் கிடப்பதாக நேற்று காலை வெண்ணந்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மதுரையில் இருந்து சென்னை சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்த ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முஸ்டக்குறிச்சியை சேர்ந்த சக்திவேல் (வயது 35) என்பதும், இவர் கமுதி பகுதியில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்ததும் தெரியவந்தது.
சக்திவேல் நேற்று அதிகாலை சக ஊழியர்களான மாரிமுத்து, முருகேசன், வெங்கடேசன், காளீஸ்வரன் ஆகியோருடன் மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறியதும், அவர்கள் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்திற்கு மனு கொடுக்க சென்றதும் தெரிந்தது. 
விசாரணை
மேலும் சக்திவேல் ரெயிலில் உள்ள படிக்கட்டுகளில் அமர்ந்து பயணம் செய்திருக்கலாம் என்றும், அப்போது அவர் நிலைதடுமாறி கீழே விழுந்து இறந்திருக்கலாம் என்று போலீசார் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது. எனினும் சக்திவேல் இறப்பில் வேறு காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் ரெயில்வே போலீசாரும் சம்பவ இடத்துக்கு சென்று பலியான சக்திவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
இதுதொடர்பாக ரெயில்வே போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சக்திவேலுக்கு திருமணமாகி தீபிகா என்ற மனைவியும், அபர்ணா காந்தி, விகாசினி என்ற மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
=======

மேலும் செய்திகள்