மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நள்ளிரவில் சோதனை காவிரி ஆற்றில் சாய துணிகளை அலசிய கும்பல் தப்பி ஓட்டம் சரக்கு வேன் பறிமுதல்

காவிரி ஆற்றில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நள்ளிரவில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது சாய துணிகளை அலசிய கும்பல் தப்பி ஓடியது.

Update: 2021-09-22 21:41 GMT
ஈரோடு
காவிரி ஆற்றில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நள்ளிரவில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது சாய துணிகளை அலசிய கும்பல் தப்பி ஓடியது.
சாய துணிகள்
ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாய, சலவை பட்டறைகள் அதிகமாக உள்ளன. அங்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை மறுசுழற்சிக்கு பயன்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆனால் சில பட்டறைகளில் சுத்திகரிக்கப்படாமல் சாய கழிவுநீர் நேரடியாக நீர்நிலைகளில் வெளியேற்றப்படுகிறது. மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தாலும், கழிவுநீர் வெளியேற்றப்படுவது தொடர் கதையாகி வருகிறது.
இதேபோல் ஈரோடு காவிரி ஆற்றில் நள்ளிரவில் சிலர் சாய துணிகளை கொண்டு வந்து தண்ணீரில் அலசிவிட்டு கொண்டு செல்கிறார்கள்.  நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் உள்ள சாய பட்டறைகளில் இருந்தும் துணிகள் கொண்டு வரப்பட்டு காவிரி ஆற்றில் அலசப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் காவிரி ஆறு மாசடைந்து வருகிறது. எனவே காவிரி ஆற்றில் சாய துணிகள் அலசுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
தப்பி ஓட்டம்
இந்தநிலையில் ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் உதயக்குமார் மற்றும் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு ஒரு கும்பல் சாய துணிகளை ஆற்று தண்ணீரில் அலசி கொண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிகாரிகள் வருவதை பார்த்த அந்த கும்பல் அலசிய துணிகளை அங்கேயே போட்டுவிட்டு தப்பி சென்றது. இதைத்தொடர்ந்து சாய துணிகளையும், துணிகளை கொண்டு வந்த சரக்கு வேனையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 
அந்த சரக்கு வேனில் வாகன பதிவு எண் இல்லாமல் இருந்தது. எனவே அந்த வேன் யாருக்கு சொந்தமானது? என்று கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். எந்த சாய பட்டறைகளில் இருந்து துணிகள் கொண்டு வரப்பட்டன? என்றும் அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர். இதேபோல் வெட்டுக்காட்டுவலசு, ராயபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாய பட்டறைகளில் இருந்து கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படுகிறதா? என்று அதிகாரிகள் நள்ளிரவில் சோதனை நடத்தினார்கள். இந்த ஆய்வில் எந்த பட்டறைகளில் இருந்தும் சாய கழிவுநீர் நேரடியாக வெளியேற்றப்படுவது கண்டுபிடிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்