கொடவா மக்களுக்கு எதிரான மனு கர்நாடக ஐகோர்ட்டில் தள்ளுபடி
கொடவா சமூகத்தினர் உரிமம் பெறாமல் துப்பாக்கி வைத்துக்கொள்ள மத்திய அரசு வழங்கிய அனுமதிக்கு எதிரான மனு கர்நாடக ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
பெங்களூரு: கொடவா சமூகத்தினர் உரிமம் பெறாமல் துப்பாக்கி வைத்துக்கொள்ள மத்திய அரசு வழங்கிய அனுமதிக்கு எதிரான மனு கர்நாடக ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
உரிமம் பெறாமல் ஆயுதம்
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் கொடவா சமூக மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இது கர்நாடகத்தின் மிகச்சிறிய மாவட்டம் ஆகும். அந்த மக்கள் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு இருந்தே, துப்பாக்கி வைத்துக்கொள்ளும் வழக்கத்தை கொண்டுள்ளனர். கொடவா மக்களை மார்ஷல்கள் என்றும் அழைக்கிறார்கள். அதன் அடிப்படையில் மத்திய உள்துறை அமைச்சகம், கொடவா சமூக மக்கள், உரிமம் பெறாமலேயே துப்பாக்கி வைத்துக்கொள்ள வசதியாக அரசியல் அமைப்பு சட்டத்தில் இருந்து விலக்கு அளித்துள்ளது.
மத்திய அரசின் இந்த அனுமதிக்கு எதிராக கர்நாடக ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீது தலைமை நீதிபதி சதீஸ்சந்திர சர்மா தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரணை நடைபெற்று வந்தது. மனுதாரர் கேப்டன் சேத்தன் சார்பில் ஆஜரான வக்கீல் வியூலதா ஆஜராகி, “பொது நலன் கருதி கொடவா மக்கள் உரிமம் பெறாமல் ஆயுதம் வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. ஆயுதம் வைத்துக்கொள்வது என்பது பொது நலனில் வருவது இல்லை. துப்பாக்கி வைத்து கொள்வதற்கு சட்டப்படி அனுமதி பெற கொடவா மக்களை எது தடுக்கிறது? என்று வாதிட்டார்.
மனு தள்ளுபடி
மத்திய அரசு சார்பில் ஆஜரான வக்கீல், கொடவா சமூக மக்களுக்கு ஆங்கிலேய ஆட்சி இருந்தபோதே, உரிமம் பெறாமல் ஆயுதம் வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. அந்த சமூகம், மார்ஷல் சமூகமாக இருந்துள்ளது. அதன் அடிப்படையில் கொடவா சமூகத்திற்கு துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் பெறுவதில் இருந்து அரசியல் சாசனத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது“ என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கொடவா சமூகம் துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் பெறுவதில் இருந்து மத்திய அரசு விலக்கு அளித்திருப்பது சரியே என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.