உள்ளாட்சி தேர்தலுக்கு பயன்படுத்தக்கூடிய பொருட்கள் லாரியில் நெல்லை வந்தது
ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு பயன்படுத்தக்கூடிய பொருட்கள் லாரியில் நெல்லைக்கு வந்தது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற 6, 9-ந் தேதிகளில் நடக்கிறது. இந்த தேர்தல் வாக்குச்சீட்டு அடிப்படையில் நடைபெறுகிறது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்கள் கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர், கிராம பஞ்சாயத்து தலைவர், யூனியன் கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் என 4 வாக்குச்சீட்டில் வாக்களிக்க வேண்டும். இந்த வாக்குச்சீட்டை முறையாக மடித்து வாக்குப்பெட்டியில் போட வேண்டும்.
இதற்காக ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெறும் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு இரும்பு பெட்டி தயார்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்தலில் பயன்படுத்தக்கூடிய இரும்பு பெட்டிகள் அனைத்தும் தயார் செய்யும் பணி நடந்து வருகிறது. சில பெட்டிகளுக்கு வர்ணம் பூசும் பணியும் நடந்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 4 ஆயிரத்து 51 வாக்குப்பெட்டிகள் தயார் நிலையில் சரிசெய்து வைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குப்பெட்டிகள் ஒவ்வொன்றும் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து யூனியன் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. மேலும் தேர்தலுக்கு பயன்படுத்தக்கூடிய எழுது பொருட்கள், பெட்டிகள், பேப்பர் உள்ளிட்ட பொருட்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து இறங்கியுள்ளன.
மேலும் தேர்தலில் யூனியன் கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு வேட்பாளர் பெயர், சின்னம் ஆகியவை அடங்கிய தகவல் அச்சடிக்கக்கூடிய பேலட் பேப்பர் அதாவது வாக்குச்சீட்டு 51 பண்டல்கள் நெல்லை கலெக்டர் அலுவலகம் வந்து இறங்கி உள்ளன. இந்த பேப்பரில் இறுதி வேட்பாளர் பட்டியல் தயாரானதும் அதில் வேட்பாளர் பெயர், சின்னம் பொறிக்கப்படும். இதேபோல் தேர்தலுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு லாரிகள் மூலம் வந்து இறங்கிக் கொண்டிருக்கின்றன.
நெல்லை மாவட்டத்தில் நடைபெறக்கூடிய ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு மாவட்ட பார்வையாளராக மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை ஆணையாளர் ஜெயகாந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று நெல்லை மாவட்டத்தில் வேட்புமனு தாக்குதல் நடைபெற்ற பஞ்சாயத்து யூனியன் அலுவலகங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.